எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் யானைகள் மோதி விபத்திற்குள்ளானதில் ஐந்து யானைகள் உயிரிழந்ததுடன், ரயிலும் தடம்புரண்டுள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில், ஹபரனைக்கும் பலுகஸ்வெள ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த காட்டுப்பகுதி யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இருந்தபோதும் இன்று அதிகாலை 4 மணிக்கு யானைகள் தண்டவாளத்தில் கூட்டமாக இருந்துள்ள நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து உயிரிழந்த யானைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் வனவிலங்கு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதோடு, குறித்த விபத்தின் காரணமாக கொழும்புக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை தடம்புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் பணிகள் மற்றும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
