எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவை கைது செய்ய சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவருடைய மனைவி பிரியங்க நியோமலி விஜயநாயக்கவையும் கைது செய்யவும் அவர்களுக்கான பிடியாணையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு இன்று (திங்கட்கிழமை) அறிவுறுத்தியுள்ளார்.
விமானக் கொள்வனவு தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் ஏயார்பஸ் நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கலின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் விசாரணை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்ததார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கவனத்திற்கொண்டு சட்ட மா அதிபர் இந்த அறிவித்தலை இன்று விடுத்துள்ளார்.
