கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்து கொள்ளவிருந்த எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து ஆராய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் லலித்த சிறிகுணருவன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கும் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு பாதிப்பான எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, டி.எஸ் ஜயவீர, நிஹால் ஜயவர்தன, நாலக்க ஜயவீர உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவின் செயற்பாட்டு காலமாக நான்கு மாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதனை நாம் பாராளுமன்றத்தில் அறிவிப்போம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எம்.சி.சி.ஒப்பந்தம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

