வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்துக்கு மத்தியில், தமது நாட்டுக்கு எதிராக ஒருபோதும் அமெரிக்காவால் போர் தொடுக்க முடியாதென, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் சவால் விடுத்துள்ளார்.
மலர்ந்திருக்கும்; 2018ஆம் ஆண்டு புத்தாண்டையிட்டு இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே, அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.
அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘தற்போது அமெரிக்காவைத் தாக்குமளவுக்கு அணுவாயுதத் திறன்களை எமது நாடு வளர்த்து வருகின்றது. இந்நிலையில், அணுவாயுதத் தாக்குதலை எவ்வேளையிலும் ஆரம்பிக்கும் வகையில், எனது மேசையில் பொத்தானை வைத்துள்ளேன். ஆகையால், வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவால் ஒருபோதும் போர் தொடுக்க முடியாது’ என்றார்.
மேலும், கொரிய தீபகற்பத்தில் ராணுவ பதற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதுடன், தென்கொரியாவுடன் உறவை வலுப்படுத்துவதும் அவசியமானது’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரியில் தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளுக்கு வடகொரியாவிலிருந்து குழுவொன்றை அனுப்பிவைப்பது தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாகவும், அவர் கூறியுள்ளார்.