அமெரிக்காவில் அரசு பணி முடக்கம் ஓர் ஆண்டு வரை தொடர்ந்தாலும் எல்லையில் சுவர் எழுப்பும் தன் முடிவில் மாற்றம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜன.,4ல் ஜன நாயகக் கட்சியினருடன் நடத்திய சந்திப்புக்குப் பின், இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது: அரசு பணி ஓர் ஆண்டு வரை முடங்கினாலும் மெக்சிகோ எல்லைச் சுவர் குறித்த என் முடிவில் மாற்றம் இல்லை. எல்லையில் நாம் சிறந்த பாதுகாப்பை பெற்றிருக்க வேண்டும். சுவருக்கான நிதியை ஒதுக்கும் வரை எந்த மசோதாவிலும் கையெழுத்து போட போவதில்லை, என்று தெரிவித்தார்.
அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப்பாதுகாப்புக்கு வழி செய்யும் வகையில் எல்லையில் சுவர் எழுப்ப ட்ரம்ப் திட்டமிட்டார். இதற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கக் கோரினார்.
ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி.,க்கள் ஒத்துழைக்க மறுத்து, இந்த நிதியாண்டுக்குச் செலவினத்துக்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர்.இதனால் அரசின் பணிகளை டிரம்ப் முடக்கினார். இதனால் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.