என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள்.” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“வாரத்துக்கொரு கேள்வி” என்ற தொனிப்பொருளில் வாராவாரம் வட மாகாண முதலமைச்சரிடம் எழுப்பப்படும் கேள்விகளில் ஒன்றை தெரிவு செய்து பதிலளித்து வருகின்றார். அந்த வகையில், இந்த வாரம் “நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றிவிடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
“நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று திருகோணமலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த போது 8 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பின் அக் குழுவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
கட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஐந்து கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது மறுக்க முடியாமல் அரசியலில் கால்வைத்தேன். நான் சேரமுன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே. அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாதிருந்தது.
சேர்ந்த போது தான் பலதும் வெளிவந்தன. ஆனால் முன்னர் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன. 2013ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன்.
ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் பரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான்
உணர்ந்தேன். கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது தான் யதார்த்தமாக இருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எந்தவித கூட்டுக் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டுகொண்டேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.