Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எத்தனைக் கற்பனை கதைகளுடன் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தர மாட்டார்கள் | மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி

June 13, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
எத்தனைக் கற்பனை கதைகளுடன் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தர மாட்டார்கள் | மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி

எத்தனைக் கற்பனை கதைகளுடன் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தர மாட்டார்கள் என அமித்ஷாவின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார்.

வேலூரில் பேசிய மத்திய உள்துறை அமைச்சருக்கு திமுகவின் பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.

“தமிழ்நாடு முதலமைச்சர் நேற்றைய தினம் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா , முழுக்க முழுக்க கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்குப் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் “கானல் நீர்” தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். தமிழ்நாடு, பா.ஜ.க. ஆட்சியில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அக்மார்க் உண்மை என்பதை அமித் ஷாவே புரிந்து கொண்டு, திசை திருப்பி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக பங்கேற்றிருந்த போது தமிழ்நாட்டிற்கு சாதித்த திட்டங்களை மிக அழகாக பட்டியலிட்டார் முதலமைச்சர். அதுபோன்ற சாதனைமிக்க சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட இந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்பதுதான் எங்கள் தலைவரின் அடிப்படையான குற்றச்சாட்டு.

தன்னுடைய பேச்சில் அப்படியொரு சிறப்புத் திட்டத்தை சுட்டிக்காட்ட முடியாமல் திணறிப் போன உள்துறை அமைச்சர், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசி, “தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஒரு சிறப்புத் திட்டமும் நிறைவேற்றவில்லை” என்று வேலூரில் வெளிப்படையாகப் பேசிக் கைவிரித்துள்ளார்.

தமிழ்நாட்டை எப்படி மத்திய அரசு வஞ்சித்துள்ளது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். மத்திய அரசின் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஆணையம் பகிர்ந்தளிப்பது குறைக்கப்பட்டுள்ளது பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில்தான்!

தமிழ்நாட்டிற்கு கடந்த 9 வருடத்தில் இரண்டு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் அளித்ததாக கூறும் பொழுது, அதே காலகட்டத்தில் உத்தரபிரதேசத்திற்கு 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை அள்ளித் தந்ததை ஏன் மறைக்க வேண்டும்? நிதிப் பகிர்வில் முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தலைநகர் தில்லி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. அண்ணாவின் மொழியில் சொன்னால் “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்ந்து கொண்டே போகிறது”

தமிழ்நாட்டிற்கு ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி வழங்கியது இந்தித் திணிப்பு, தமிழ்மொழியைப் புறக்கணித்து சமஸ்கிருதத்திற்கு தாலாட்டு, திருப்பூர் கண்டெய்னர் மறைப்பு, அம்மையார் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஓபிஎஸ்-இபிஎஸ் என ஆளவிட்டு தமிழ்நாட்டின் நிர்வாகத்தை அடியோடு சீரழித்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னால் இருந்த தமிழ்நாட்டைத் திட்டமிட்டு வீழ்த்தியது, நீட் கொண்டு வந்து தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது, உதய் திட்டத்தில் மிரட்டி கையெழுத்திட வைத்து தமிழ்நாட்டு மக்கள் மீது மின்கட்டண உயர்வை ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும் என்று கெடுபிடி செய்வது, ஒரு பயோமெட்ரிக் கேமிரா வேலை செய்யவில்லை என்பதற்காக ஸ்டான்லி உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழ்நாட்டை அவமானப்படுத்தியது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒன்றிய அரசில் தமிழை ஒன்றிய ஆட்சி மொழியாக்க மாட்டார்கள். ஏன் உயர்நீதிமன்றத்தில் கூட ஆட்சி மொழியாக்க அனுமதிக்க மாட்டார்கள். மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீடு செய்ய மாட்டார்கள். ஏன், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளில் கூட தமிழ்நாட்டிலிருந்து சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளை நியமனம் செய்ய மாட்டார்கள். ஆனால் தமிழ் மீது பாசம் இருப்பது போல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற வேஷம் போடுவது எந்த ஆட்சி? அது சாட்சாத் பா.ஜ.க. ஆட்சிதான்!

ஒன்பதாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் இல்லை என்கிறார். வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ என அனைத்தையும் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக்கி விட்டு, நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

உள்துறை அமைச்சரே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, நீதிமன்றங்கள் ஆகியவற்றை உங்கள் “கோரப்பிடியில்” இருந்து விடுவியுங்கள். அப்புறம் தெரியும் உங்கள் 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் நடந்ததா அல்லது ஊழல் கோப்புகள் ஒவ்வொரு துறையிலும் உறங்கிக் கொண்டிருக்கின்றனவா என்று? ஊழலே செய்யாத ஆட்சியில் ஏன் அதானி பற்றி நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு பயப்பட வேண்டும்? ஊழலே இல்லை என்றால் ஏன் ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திலேயே “நாட்டின் ரகசியம்” என வாதிட வேண்டும்?

நாட்டு மக்கள் குஜராத் கலவரத்தையும் – அந்த வழக்குகள் எப்படி நீர்த்துப் போக வைக்கப்பட்டன என்பதையும் – சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு நீதிபதிக்கு என்ன ஆனது என்பதையும் இன்னும் மறந்து விடவில்லை என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருப்பதே மத்திய பா.ஜ.க. அரசுதான். அந்த அரசின் முகமூடியை நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிழித்தெறிந்துவிட்டார். அந்த ஆதங்கத்தில் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தந்த சிறப்புத் திட்டங்களை பட்டியலிட முடியாமல் வேலூரிலிருந்து திரும்பியிருக்கிறார் என்பதே எங்களின் முதலமைச்சருக்கு கிடைத்த முதல் வெற்றி.

இதே வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் அளிக்கத்தான் போகிறார்கள்.

எனவே, “மூழ்கும் கப்பலாக” இருக்கும் பா.ஜ.க. இன்னும் எத்தனைக் கற்பனை கதைகள், ஏவல் படைகளுடன் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தாலும் – தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட கொடுக்க மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

Previous Post

பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததால் 9 பேர் பலி

Next Post

அமெரிக்க – இந்திய எதிர்காலம் ஒன்றாக உள்ளமைக்கு பிரதமர் மோடியின் விஜயம் சாட்சி பகிர்கிறது | அமெரிக்க – இந்திய வர்த்தக பேரவை

Next Post
அமெரிக்க – இந்திய எதிர்காலம் ஒன்றாக உள்ளமைக்கு பிரதமர் மோடியின் விஜயம் சாட்சி பகிர்கிறது | அமெரிக்க – இந்திய வர்த்தக பேரவை

அமெரிக்க - இந்திய எதிர்காலம் ஒன்றாக உள்ளமைக்கு பிரதமர் மோடியின் விஜயம் சாட்சி பகிர்கிறது | அமெரிக்க - இந்திய வர்த்தக பேரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures