தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் அதன் சொந்த மண்ணில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றிகொண்ட இலங்கை, கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்திடம் மிக மோசமான தோல்வி அடைந்து மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டிலிருந்து வேளியேறியது.
உண்மையில் சொல்வதென்றால் 8ஆவது மகளிர் இருபது 20 உகலக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை முன்னரைவிட சிறப்பாக பங்குபற்றியது என்று கூறினால் தவறாகாது.
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து, ‘உலகம் அஸ்தமித்துவிடவில்லை. நாளைய தினம் சூரியன் உதயமாகும்.
எதிர்காலத்திற்கென ஒரு சிறந்த அணியை உருவாக்க விரும்புகிறேன். உணர்வு இன்று நலமாக அமையவில்லை. ஆனால், எனது கவனம் எல்லாம் அடுத்த கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஆகும்’ என புன்முறுவலுடன் குறிப்பிட்டார்.
சுமார் 2 வருட காலம் (2020 மார்ச் – 2022 ஜனவரி) சர்வதேச கிரிக்கெட் வாசனை இன்றி இருந்த இலங்கை அணியின் உலகக் கிண்ண பெறுபேறுகள் 50 வீதம் சிறப்பாக இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தால் தாக்கம் எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை சொல்லில் விளக்கத்தேவையில்லை.
இந் நிலையில், மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் 3 கிரிக்கெட் தொடர்களில் இலங்கை விளையாடவுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் விளையாட திட்டமிடப்பட்ட பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் விரைவில் விளையாடவுள்ள இலங்கை, அதன் பின்னர் நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுடனான தொடர்களிலும் விளையாடவுள்ளது. இந்தத் தொடர்கள் இலங்கை வீராங்கனைகளுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
‘இளம் வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் போட்டி அனுபவம் அவசியம். எதிர்காலத்தில் அவர்கள் நிறைய கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடவேண்டும்.
தரவரிசையில் உயரிய நிலையில் இருக்கும் நான்கு முன்னணி அணிகளுடன் நாங்கள் நிறைய விளையாடவேண்டும்’ என சமரி அத்தப்பத்து கூறினார்.
தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுடனான முதலிரண்டு போட்டிகளில் மிகத் திறமையாக விளையாடி வெற்றிபெற்ற இலங்கை, 3ஆவது போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. அப் போட்டி முடிவு முன்கூட்டியே எழுதப்பட்ட ஒன்றாகும்.
‘அவுஸ்திரேலியாவுடனான போட்டி குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால், இன்றைய போட்டி (நியூஸிலாந்து) குறித்து நான் சிறிது கவலை அடைந்தேன். அது எமக்கு மிக முக்கிய போட்டியாகும்.
எமது அணியில் இடம்பெற்ற சிலர் அளவுக்கு அதிகமான அழுதத்தை தங்கள் தோள்மீது போட்டுக்கொண்டார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. அழுத்தத்தை அவர்கள் சரியான முறையில் கையாளவில்லை என நான் நினைக்கிறேன்’ என சமரி அத்தப்பத்து மேலும் குறிப்பிட்டார்.
நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடிய போது ஆரம்ப வீராங்கனை பேர்னடின் பெஸுய்டென்ஹூட் கொடுத்த 2 பிடிகளையும் சுஸி பேட்ஸ் கொடுத்த ஒரு பிடியையும் இலங்கை அணியினர் தவறவிட்டதன் மூலம் அவர்கள் மத்தியில் பதற்றம் குடிகொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோதும் இலங்கை வீராங்கனைகள் முறையாக நியூஸிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ளவில்லை. எடுத்த எடுப்பில் அதிரடியில் இறங்கியதால் இலகுவான பிடிகளைக் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
எவ்வாறாயினும் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியல் ஹர்ஷித்தா சமரவிக்ரம (4 போட்டிகளில் 119 ஓட்டங்கள்), சமரி அத்தபத்து (4 போட்டிகளில் 118 ஓட்டங்கள்), 16 வயதுடைய விஷ்மி குணரட்ன, நிலக்ஷி டி சில்வா (இருவரும் 4 போட்டிகளில் தலா 60 ஓட்டங்கள்) ஆகிய நால்வரும் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கியிருந்தனர். அவர்களில் விஷ்மி குணரட்ன வருங்காலத்தில் உலகத் தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீராங்கனையாக பிரகாசிப்பார் என நம்பப்படுகிறது.
பந்துவீச்சில் ஓஷாதி ரணசிங்க, இனோக்கா ரணவீர ஆகிய இருவரும் 4 போட்டிகளில் தலா 5 விக்கெட்களை வீழ்த்தியதுடன் அவர்களது சராசரி ஓரளவு சிறப்பாக அமைந்திருந்தது.
இலங்கை வீராங்கனைகள் வருடாந்தம் அதிகளவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றினால் அவர்களது திறமை சர்வதேச தரம் வாய்ந்ததாக உயரும் என்பது உறுதி. அதன் மூலம் இதர அணிகளுக்கு சவால் விடுக்கக்கூடிய அணியாக இலங்கை உருவெடுக்கும்.