அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்களை மீண்டும் ஒன்றிணைத்து அமைக்கும் இடைக்கால அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மை மீது நம்பிக்கை கொள்ள முடியாது.
பொதுஜன பெரமுன தலைமையிலான அமைச்சரவையே ஸ்தாபிக்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்கள் தற்போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக்கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறார்கள்.
இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு பிரதான எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட்டுக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்களை ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது எந்தளவிற்கு நம்பகத்தன்மையாக அமையும் என்பது கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தல் யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அரசாங்கத்திற்கு துரோகமிழைத்த தரப்பினருடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு எதிர்வரும் வாரம் சிறந்த தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.எக்காரணிகளுக்காகவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகமாட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையை ஸ்தாபிக்க வேண்டும் என பெரும்பாலான தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அமைச்சரவையே ஸ்தாபிக்கப்படும். பாராளுமன்ற மட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இனிவரும் நாட்களில் முன்னெடுப்போம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]