எகிப்து நாட்டில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 32 பயணிகள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டின் மத்தியப் பகுதியான பெனி சூயெப் நகரை அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவுடன் இணைக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் இன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியே வந்த லாரியும் – பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை கணிசமாக உயரும் என அஞ்சப்படுகிறது. படுமோசமான சாலைகளால் எகிப்து நாட்டில் சாலை விபத்துகள் மிக அதிகமாக உள்ளது என்றும் இதனால் ஆண்டுதோறும் சுமார் 12 ஆயிரம் மக்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்து வருவதாகவும் உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.