உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான சிறிய பாலங்களை நிலைபேறான வகையில் மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிய பாலங்களை மேம்படுத்தும் முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சு, அனைத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து கிராமிய அணுகல் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக விரிவான தேவைப் பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளது.
சிறிய பாலங்கள் அதிகளவில் பழுதடைந்தும், அகலம் குறைவாகவும், பாதுகாப்பற்றதாகவும், அழிவடைந்தும் காணப்படுவதால், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் குறிப்பாக இடர்களுக்கு உள்ளாகின்றமையை தேவைப் பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாதுகாப்பான பயண முடிவிடத்தை உறுதிப்படுத்தல், கிராமிய உற்பத்திகளுக்கு வசதியளித்தல் போன்ற நோக்கங்களுடன், ‘உள்@ராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான சிறிய பாலங்களை நிலைபேறான வகையில் மேம்படுத்தல் கருத்திட்டத்தை’ நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் 25 மாவட்டங்களில் 229 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் காணப்படுகின்ற 880 பாலங்களை மேம்படுத்த வேண்டிய முன்னுரிமை அடிப்படையில் நிலைபேறான வகையில் அபிவிருத்தி செய்வதற்காக, 6,793.03 மில்லியன் ரூபாய்கள் மொத்த மதிப்பீட்டுச் செலவில், 2026 ஆம் ஆண்டு தொடக்கம் 2029 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

