Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தியிருந்தால் நாட்டின் தலைவிதி மோசாக இருந்திருக்கும் | ஜனாதிபதி

July 21, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நிதி ஒதுக்கீட்டின்போது, அன்று தேர்தலை விட பல்வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று (20) நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் நாட்டை பொறுப்பேற்ற போது நாடு பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. பொருளாதார வீழ்ச்சி மட்டுமன்றி, சட்டமும் அரசியலும் வீழ்ச்சி கண்டன. ஆனால் இந்த தேர்தலில் கட்சிகள் தோல்வி அடைந்துள்ளன.

பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, அச்சமின்றி ஏற்றுக்கொண்டேன். ஆனால் அதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.

அப்போது அவர்கள் யாரும் சவாலை ஏற்க முன்வரவில்லை. ஆனால் நான் சவாலை ஏற்றுக்கொண்டதன் பின்னர், நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தேன்.

அதன் பிரகாரம், முதலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருடன் கலந்துரையாடுவதற்குத் தயாரானோம். ஆனால் அக்கட்சியின் தவிசாளர் அதனை ஏற்கவில்லை. அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாப்பட்டது. அப்போது அவர் கட்சியினருடன் கலந்து பேசி முடிவை அறியத்தருவதாக சொன்னார். அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.

அன்றைய தினம் நான் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவைப் பெற முயற்சித்தேன். ஆனால் அப்போது அதன் தலைவர் சஜித் பிரேமதாச தானும் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

எது எப்படியோ, இறுதியில் அந்த வாக்கெடுப்பில் அவர் போட்டியிடாமல், டலஸ் அழகப்பெருமவை போட்டியிட வைத்தார். எவ்வாறேனும், அந்த நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழுவொன்று எனக்கு வாக்களித்தது. அதேபோன்று, தமிழ் கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடினேன். அவர்களின் ஆதரவையும் நான் பெற்றேன்.

அதன்படி, நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்துவிட்டது. கீழ்மட்ட நிர்வாகப் பொறிமுறையும் அரசியல் பொறிமுறையும் தகர்ந்து போயின.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்தி, அவர்கள் வீதிக்கு வராமல் மிரட்டும் சூழல் எங்கும் காணப்பட்டது. பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் மாத்திரமன்றி ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வீதியில் இறங்கக்கூடிய சூழல் இருக்கவில்லை.

இந்நிலை மேலும் நீடித்திருந்தால் கிராமத்தின் ஆட்சியை கலகக்காரர்கள் கைப்பற்றி இருப்பார்கள். கீழ்மட்ட அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றவே அவர்கள் முயன்றனர். இந்த சவால்களை முறியடித்து நாட்டை படிப்படியாக முன்னேற்றுவதற்கு என்னால் முடிந்தது. இந்தப் பயணத்தின் போது எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வந்தது. ஆனால் அதற்குப் பணம் ஒதுக்கும் திராணி இருக்கவில்லை. அந்த தேர்தலுக்குப் பணம் ஒதுக்குவதை விட, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் அன்று இருந்தன. மருந்து, எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய பணம் செலவிட வேண்டியிருந்தது.

அதன்போது, அன்று இருந்த தேர்தல்கள் ஆணைக்குழு, உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் சாலிய பீரிஸிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டது. அது தவறான செயல் என்பதைக் கூற வேண்டும். எப்படியோ பின்னர் அதன் உறுப்பினர்கள் இராஜினாமா செய்தனர். புதிய குழு நியமிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் நான் உண்மையைக் கூறினேன். உள்ளூராட்சி மன்றத்த் தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் பணமில்லை என்பதை மீண்டும் தெரிவித்தேன்.

நான் அவ்வாறு செயற்படாமல், பொருளாதார அபிவிருத்தியை ஒதுக்கிவிட்டு தேர்தலை நடத்தி இருந்தால், இன்று இந்த நாட்டுக்கு ஏற்படும் அவல நிலையை நான் கூற வேண்டியதில்லை. அப்படிச் செய்தால் நாடு அன்று இருந்த நிலையிலிருந்து மீள முடிந்திருக்குமா?

அஸ்வெசுமவிற்கு, சமுர்த்தியைப் போன்று மூன்று மடங்கு பணம் ஒதுக்க முடியுமா? ‘உறுமய’ காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியுமா? அப்படி நடந்திருந்தால் எங்களால் இவை ஒன்றையும் செய்திருக்க முடியாது.

எவ்வாறாயினும், இந்த சவால்களை வெற்றிகொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுவான அடித்தளத்தில் முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம். அதனால்தான் இன்று மக்கள் கையில் பணம் இருக்கிறது. இந்நாட்டில் அவதியுறும் சாதாரண மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க விரும்பினேன்.

அதன்படி, அவர்களுக்கு அஸ்வெசும வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தலா பத்து கிலோ அரிசி வழங்கப்பட்டது. ‘உறுமய’ திட்டத்தின் கீழ் முழு உரிமையுள்ள காணி உறுதிகள் வழங்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படுகிறது. மேலும் விவசாய நவீனமயமாக்கல் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், கீழ் மட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவதற்கு எம்மால் முடிந்தது. இந்த நடவடிக்கைகளால் மக்கள் இன்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அன்றைய தினம் நாட்டில் உள்ள பெருந்தொகையான மக்கள் தமது வாக்குகளை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்குவதாக அறிவித்தனர். ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. அவர்களை இன்று காணவில்லை. மற்றொரு பகுதியினர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கப் போவதாக அறிவித்தனர்.

இன்று அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள். நாம் முன்னெடுத்த வலுவான வேலைத்திட்டங்களினால் அவர்களால் மக்கள் மத்தியில் செல்ல முடியவில்லை. நாம் உருவாக்கிய சக்தியை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆனால் எங்களின் செயற்பாட்டை நாம் இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்.

இன்று இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளோம். எவ்வாறாயினும் எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் தற்போதைய தடையை நீக்க நடவடிக்கை எடுப்போம். வேட்புமனு தாக்கல் செய்து ஒரு வருடம் கழித்து மீண்டும் தேர்தலை நடத்த முடியாது.

புதியவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். 1988 இல் பிரதேச சபைத்  தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்ட விதம் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. ஆனால் அந்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியால் அந்த வேட்புமனுக்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட்டன. அவ்வாறே உங்கள் அனைவருக்கும் நீதியை நிலைநாட்ட எதிர்காலத்தில் செயற்படுவோம். இன்று நீங்கள் பிரதேச மட்டத்தில் மக்களிடம் செல்ல ஒரு நல்ல சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அதைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் சென்று உண்மையைக் கூறுங்கள். நாங்கள் கடந்து வந்த கடினமான பயணம் குறித்து மக்களிடம் உள்ள புரிதலை அதிகரிக்கச் செய்யுங்கள். உங்களால் அதனைச் செய்ய முடியும்.

மக்கள் விடுதலை முன்னணி,ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட குழுக்கள் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தொலைநோக்குடைய, தெளிவான திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. இவர்கள் போலிப் பிரசாரம் செய்வதையும் மக்கள் அறிந்துகொண்டுள்ளனர். பொய் சொல்வதால் நாட்டை முன்னேற்ற முடியாது.

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளை போல இலங்கையை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் தனித்தனியாகச் செயல்படும் நேரங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கட்டமைப்பில் ஒன்றாக வேலை செய்வதற்கான இயலுமையையும் கொண்டிருக்க வேண்டும். 

வேலையின்மையினால் பாதிக்கப்பட்டுள்ள இளையோருக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது. இதன்போது நாட்டில் 25% ஆக வறியவர்கள் உள்ளனர் என்பதையும் மறந்துவிட முடியாது. 

அந்த நிலையில் இருந்து மக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான பல்வேறு பொருளாதார திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்தி, கிராமப்புறங்களிலுள்ள வறியவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளோம். பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்தோம். அத்துடன், பழைய முறையில்  மாகாண சபைகள் செயற்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்மொழிந்துள்ளார். அந்த முன்மொழி குறித்து எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஆனால் மாகாண சபைகளிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் உள்ளிட்ட கட்சிகள் கடந்த ஆறு மாதங்களாக ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களை செய்து வருகின்றன. அந்த கட்சிகள் ஒரு வருடமாக அதற்காக பாடுபடுகின்றனர். நாம் உரிய நேரத்தில் பணிகளை ஆரம்பிப்போம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்று போன்ற ஒரு நாளில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து பாராளுமன்றத்தில் 134 வாக்குகளைப் அளித்து ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

ஜனநாயக ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு இயலுமை உள்ளது என்பதை நம்பியே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதியை தெரிவு செய்தோம். இன்று நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

அதனால் எங்கள் நம்பிக்கையை ஜனாதிபதி காப்பாற்றியுள்ளார். நாங்கள் கொண்டிருந்த  நம்பிக்கையை ஜனாதிபதி உடைக்கவில்லை. அதற்காக ஜனாதிபதிக்கு நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்க விரும்புகிறோம். அரசியலில் எப்படி முடிவெடுப்பது என்று எங்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்.

உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக நான் நியமிக்கப்பட்ட போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் நெருங்கிக் கொண்டிருந்தது. நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தது. அன்றைய தினம் 90,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வேட்புமனுக்களைச் சமர்ப்பித்த அரசியல் கட்சிகள் இன்று இல்லை. அன்று வேட்புமனு தாக்கல் செய்த பலர் இன்று இந்த நாட்டிலும் இல்லை.

உள்ளூராட்சி மன்றங்களில் தொழிலுக்காக அமர்த்தப்பட்ட 8400 தொழிலாளர்கள் இக்காட்டான நிலைமையை சந்தித்தனர். ஆனால் ஜனாதிபதி தலையிட்டு அவர்களுக்கு நிரந்த நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால் அவர்களுக்கு ஓய்வூதியத்துடன் தொழிலுக்கான நிரந்தர நியமனங்களைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது. 

உள்ளூராட்சி மன்ற அமைச்சின் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார். நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த துணிச்சலான முடிவுகளால் இன்று தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அந்த நிலைமையை தக்கவைத்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். அதற்காக உள்ளூராட்சி பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியது போல் நாடு புதிய பாதையில் பயணிக்கிறது. கட்சி, நிறத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேசியத் தலைவராக நியமிக்கவில்லை. அதற்காக பெரும் அபர்ப்பணிப்பை செய்துள்ளீர்கள். உங்களது வீடுகள், சொத்துக்கள் மற்றும் உங்களது எதிர்கால அரசியல் கட்டமைப்புகள் கூட இதன் காரணமாக இழக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அர்ப்பணித்த உங்கள் அனைவருக்கும் எங்கள் மரியாதையும் நன்றியும் உண்டு.

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும். நாம் அதற்குத் தயாராகும்போது, பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். தேர்தலுக்கான முன்னெடுப்புக்கள் இல்லை என்பதால் தேர்தலை காலம் தாழ்த்த நாம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், எமக்கு அந்த தேவை இல்லை. தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் 22 ஆவது திருத்தம் முன்மொழியப்படுவதாக கூறப்படுகிறது. 

அவ்வாறு சொல்பவர்கள் அரசியலமைப்பின் 83 ஆவது பிரிவை நன்றாக படிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செய்த தவறைத் திருத்துவதற்காகவே அரசியலமைப்புத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யக்கூடியதாக அமையும்.” என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகளான பிரேமநாத் சி.தொலவத்த, மதுர விதானகே, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் நகர மேயர் நந்தன குணதிலக்க உட்பட, ஐக்கிய தேசியக் கட்சி,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மேயர்கள், பிரதி மேயர்கள், தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உட்பட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Previous Post

ஊரடங்கை நீடித்தது பங்களாதேஷ் அரசாங்கம் – இணைய சேவைகள் முடக்கம்

Next Post

புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பியவுடன் அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்

Next Post
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பியவுடன் அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures