Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உள்ளுராட்சி தேர்தல் 2018 விநோதங்கள் வேடிக்கைகள்

December 24, 2017
in News, Politics
0
உள்ளுராட்சி தேர்தல் 2018 விநோதங்கள் வேடிக்கைகள்

கானல் நீர் போல் மக்களுக்குக் காட்டப்பட்டுக் கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தலை மக்களின் காலடிகளுக்கு இழுத்து வந்து கொடுத்ததில் தற்போதய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருக்கின்ற மஹிந்த தேசப்பிரிய வகித்த பங்கு இந்த நாட்டு அரசியலில் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டிய ஒரு அம்சம்.

இந்தத்தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் துiறைக்குப் பொறுப்பான அமைச்சர் செய்து கொண்டிருந்தார். அதற்கு மேல் மட்ட ஒப்புதலும் இருந்து வந்தது என்பதனை நாம் கடந்த பல கட்டுரைகளில் விவரமாகவும் ஆதாரபூர்வமாகவும் சொல்லி வந்திருக்கின்றோம்.

இந்தப் பின்னணியில் பிரச்சினை இல்லாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் என்று, தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் அறிவித்த அதிரடி முடிவு நல்லாட்சி அரசாங்கத்தையும் துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த வகையில் தேர்தல் ஆணையாளர்தான் இந்த ஜனநாயக வெற்றியின் ஹீரோ என்பதனை நாம் மீண்டும் மீண்டும் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். இப்போது நாட்டில் தேர்தல் வசந்தம் கலைகட்டி இருக்கின்றது.

அன்று ஜாம்பவான் போன்றிருந்த ராஜபக்ஷாக்களின் அரசியல் அட்டகாசங்களுக்கு ஆப்பு வைத்து இந்த நாட்டில் ஜனநாயகத்தை காக்க தன்னுயிரை பணயம் வைத்து, நெருக்கடியான 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகத்தை இந்த நாட்டில் பாதுகாத்துத் தந்தவரும் நமது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியதான்.!

சுதந்திரத்திற்குப் பின் இந்த நாட்டில் நூற்றுக்கும் மேட்பட்ட தேர்தல்கள் நடந்திருக்கும். என்றாலும் இலங்கை அரசியல் வரலாற்றில் இந்த முறை நடக்கின்ற 2018 உள்ளாட்சித் தேர்தல் பல காரணங்களினால் முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகின்றது.

நாம் முன்பு பல முறை சொல்லி இருந்தது போல் பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து புதிதாக சுதந்திரக் கட்சியை அமைத்து நாட்டில் அன்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவரது கொள்கைகளுக்கு இன்று வரை சிங்கள மக்கள் மத்தியில் நல்ல அங்கிகாரமும் வரவேற்பும் இருந்து வருகின்றது என்பதனைப் பார்க்க முடிகின்றது. ஆனால் இப்போது இன்று 2018ல் இந்தத் தேர்தலில் கட்சிகளுக்கு கொள்கை கோட்பாடுகள் என்று ஏதும் கிடையாது.

இனவாதமும் தனிநபர் வழிபாடுகளையும் முன்வைத்து இந்தத் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இந்தத் தேர்தல் நாட்டில் நடக்கின்ற ஒரு கீழ்;மட்டத் தேர்தல்.! இதனைக் குட்டித்தேர்தல் என்று அழைப்பதுதான் வழக்கம். ஆனால் 2018 பெப்ரவாரி 10ல் நடக்கின்ற இந்தக் குட்டித் தேர்தல் நாட்டில் நடக்கின்ற மிகவும் பரபரப்பான-சூடான ஒரு தேர்தலாக இன்று பார்க்கப்படுகின்றது. ஒரு பொதுத்தேர்தலையும் விஞ்சிய தேர்தலாக இது அமைந்து காணப்படுகின்றது. அதற்கு பல காரணங்கள் நியாயங்கள் இருக்கின்றன.

கடந்த இரு வாரங்களாக அரசியல் கட்சித் தலைமையகங்களுடன் தொடர்பு கொள்ளவும் கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கவும் வேண்டிய பல தேவைகள் கட்டுரையாளனுக்கு இருந்தது. அச்சந்தர்ப்பங்களில் அரசியல் தலைவர்களையும் அவ்வப்போது சந்திக்க வேண்டி ஏற்பட்டது. அங்கு கண்ட காட்சிகளையும் தற்போது இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடக்கின்ற விநோதங்களையும் வேடிக்கைகளையும் வைத்து இந்த வாரம் நமது வாசகர்களுக்குக் கதை சொல்லலாம் என்று தோன்றுகின்றது.

தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பான விளக்கங்களையும் அறிவுறுத்தல்களையும் தேர்தல் ஆணையகம் கட்சிகளுக்கு வழங்கி இருந்தது. அத்துடன் இது பற்றி பத்திரிகை விளம்பரங்களும் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் மொத்த உறுப்பினர்கள், வட்டாரங்களின் எண்ணிக்கை, சேர்க்கப்பட வேண்டிய நியமன உறுப்பினர்கள், சேர்க்கப்பட வேண்டிய பெண்களின் எண்ணிக்கை செலுத்தப்பட வேண்டிய கட்டணத் தொகை என்பன தெளிவாக பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் கட்சிகள் சிறுபிள்ளைத் தனமான தவறுகளை விட்டிருக்கின்றது.

இதிலுள்ள சுவையான நிகழ்வுகள் சிலவற்றை இப்போது சற்று பார்ப்போம். கட்சியின் பெயரை எழுதவேண்டிய இடத்தில் ஒரு வேட்பு மனுவில் கட்சியின் செயலாளர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதாவது கபீர் ஹசீம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனைச் சரிபார்த்து அந்தக் கட்சியின் செயலாளரும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். சரிபார்த்த சமாதான நீதவானும் கபீர் ஹசீமின் பெயரை கட்சியின் பெயர் என்று உறுதி செய்திருக்கின்றார்.

சட்டம் போதிக்கின்ற பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தனது விண்ணப்பங்களில் சிறுதவறுகள் நடந்துதான் இருக்கின்றது. அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாது எங்களுக்கு போட்டியிட அனுமதி தரவேண்டும் என்று நீதி மன்றத்திடம் கேட்டிருக்கின்றார். சட்டத்தில் தவறுகளுக்கு சலுகை வேண்டும் என்பது சட்டம் போதிக்கின்ற பேராசிரியர் வாதம்! முதல் சுற்றில் ஆறு இடங்களிலும், இரண்டாம் சுற்றில் ஐந்து இடங்களிலும் பேராசிரியர் கட்சி கோட்டை விட்டிருக்கின்றது.

மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் பயணம் செய்த ஹெலி உரிய நேரத்தில் வன்னியிலிருந்து வந்து சேராத காரணத்தால் இரு இடங்களில் அவர்கள் மரச்சின்னத்தை பறி கொடுத்து தேர்தலுக்கு சுயேட்சையாக களமிறங்க வேண்டி வந்திருக்கின்றது. ஏறாவூர் பற்றில் மு.காவால் விண்ணப்பங்களை உரிய நேரத்தில் கையளிக்க முடியவில்லை. இதனால் அவர்களினால் அங்கு போட்டிக்குப் போக முடியவில்லை.

வெலிகமையிலும் ரிதீகமையிலும் பெண்களின் எண்ணிக்கையை சரியாக பதியாமல் விட்டதால் அவர்கள் விண்ணப்பங்கள் அங்கு குப்பைக்கு போய் இருக்கின்றது. இது கட்சிகள், சட்டத்தரணிகள், அரசியல் ஆலோசகர்கள் என்று பலபேரை வைத்துத் செய்கின்ற ஒரு பணி. ஒரு பாடசாலை மாணவண்கூட ஆர்வமிருந்தால் இதனைச் சீராகச் செய்து முடிக்கலாம்.

சமூக நலன் சார்ந்த நுணுக்கமான விடயங்களில் நமது அரசியல் தலைவர்கள் எப்படிக் காரியம் பார்ப்பார்கள் என்று நாம் இதனை வைத்து மட்டிட்டுக் கொள்ள முடியும். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவிபி இந்த முறை தாக்கல் செய்த விண்ணப்பங்களில் எதுவும் நிராகரிக்கப்படவில்லை. எந்த முறையும் ஜேவிபி இவ்வாறான விண்ணப்பங்களை மிக துல்லியமாகப் பூர்த்தி செய்து கையளித்து வருவது குறிப்பிடத் தக்கது.

இந்தத் தேர்தலில் கட்சிகளுக்கு கொள்கை-கோட்பாடு என்று ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. யார் வேண்டுமானாலும் யாருடனும் கூட்டுச்சேரலாம் என்ற நிலை! ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி என்ற பேதங்கள் கிடையாது. அதிலுள்ள மிகப் பெரிய வேடிக்கை என்ன வென்றால் ஏறாவூரில் மு.கா.வைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும் அந்தக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் ஏட்டிக்குப்போட்டியாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து அங்கு கலாட்டா நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதில் மு.கா. தலைவர் பாராளுமன்ற உறுப்பினருக்கு பச்சை கொடிகாட்டிக் கொண்டிருக்கின்றார் என்று முதலமைச்சர் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது சந்தர்ப்பம் கிடைத்தால் முதல்வர் தலைவருக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுக்க இருக்கின்றார் என்றும் அந்தவூர் தகவல்கள் எமக்குத் தெரிவிக்கின்றன.

மேலும் அமைச்சர் ராஜித்த தனது பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பட்டியலையும் சுதந்திரக் கட்சி வேட்பாளர் பட்டியலையும் தயாரித்துக் கொடுத்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.

வடக்கில் தலைமை வேட்பாளர் நியமனங்கள் அறிவிப்பு விடயங்களில் சட்டத்தரணியான அரசியல்வாதி வரம்பு மீறி நடந்து கொள்கின்றார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டப்படுகின்றது.

சுதந்திரக் கட்சியில் மைத்திரி – மஹிந்த அணிகளை தேர்தலுக்கு முன்னர் இணைத்துக் கொள்ள முயற்சிகள் செய்யப்பட்டபோதும் அது கைகூடவில்லை. இப்போது தேர்தலுக்குப்பின் மைத்திரி- மஹிந்த அணிகள் இணைந்தே சபைகளை அமைக்கும் என்று இருதரப்பினரும் பகிரங்கமாகப்பேசி வருகின்றார்கள்.

அமைச்சர் திலான் பெரேரா தாங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்ற தெஹியத்தக்கண்டிய, பதியதலாவை பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பின் போது அங்குள்ள சுதந்திரக் கட்சியினர் மொட்டுக்கள் அணியினருக்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க இருப்பதாக கூறி வருகின்றார். அதே போன்று மொட்டுக்கள் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கின்ற இடங்களில் அவர்கள் சுதந்திரக் கட்சியை ஆதரிக்க இருக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது.

மொட்டுக்கள் அணியைச் சேர்ந்த மஹிந்தானந்த அலுத்கமகே இதற்குச் சமாந்திரமான கருத்துக்களை பேசி வருகின்றார்.ஆனால் கடும்போக்கு மஹிந்தவாதிகள் மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியுடன் எந்தக் கொடுக்கல் வாங்கல்களும் எமக்குக் கிடையாது என்று கூறுகின்றார்கள். எனவே அந்த அணிக்குள் பிரதேச சபைகளில் கூட்டாச்சி அமைப்பது தொடர்ப்பில் குழப்ப நிலை இருப்பது தெளிவாகின்து.

இதன்படி தேர்தலுக்குப் பின் அமைகின்ற பிரதேச சபைகள் மைத்திரி-மஹிந்த அணி ஆதிக்கம் மேலோங்கும் என்று எதிர்பார்க்க முடியும். எந்தக் காரணம் கொண்டும் சுதந்திரக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சபைகளை அமைக்கத் தயாரில்லை என்பதனை அவதானிக்க முடிகின்றது. மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் குடித்தனம். உள்ளுராட்சி மன்றங்களில் கீரியும் பாம்பும் போலும்!

இதற்கிடையில் ஐ.தே.க. தயாரித்துள்ள வேட்பாளர் பட்டியலுடன் ஒத்துப்போக முடியாத உள்ளுர் அரசியல்வாதிகள் கட்சிக்கு எதிராக மாற்று அணிகளைக் களத்தில் இறக்கி தலைமைக்குப் பாடம் புகட்ட முனைகின்றார்கள். இன்னும் பல இடங்களில் பொதுத்தேர்தல் காலத்தில் விருப்பு வாக்குகள் தேடிக்கொடுத்ததில் உள்ள குரோதங்கள் காரணமாக அமைப்பாளர்கள் பலருக்கு வேட்புமனு வழங்காது பலிவாங்கி இருக்கின்றார்கள் இந்த இடங்களிலும் போட்டிக் குழுக்கள் களத்தில் குதித்து அந்த அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க முனைவதும் அவதானிக்க முடிகின்றது. எனவே ஐ.தே.க.வுக்குள் பல மாற்று அணிகள் எதிரும் புதிருமாக தேர்தல் களத்தில்!

இதற்கிடையில் சட்டவிரோதமாக பெரும் எண்ணிக்கையான வேட்;பாளர்கள் வேட்புமனுக்களில் கையெழுத்துப் போட்டிருப்பது தொடர்பான தகவல்கள் எமக்குத் தெரியவந்திருக்கின்றது. சமூர்தி ஊழியர்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது அப்படி போட்டியிடுவதானால் அவர்கள் முன்கூட்டியே இடமாற்றலாகிக் கொள்ள வேண்டும் என்று சட்டம் வந்துள்ளதால் அவர்களுக்கு வேட்பாளர்களாக வருவதில் சிக்கல். என்றாலும் அவர்கள் பெயர் விண்ணப்பத்தில் இருக்கின்றது என்பதற்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட மாட்டாது என்று தெரிந்த பலர் அதில் துணிந்து கையெழுத்துப்போட்டுக் களத்தில் இறங்கி இருக்கின்றார்கள்.

இவர்கள் பெரும்பாலானவர்கள் மஹிந்த ஆதரவாளர்கள் மொட்டுக்காரர்கள். சிறு எண்ணிக்கையான மைத்திரி தரப்பு சுதந்திரக் கட்சிக்காரர்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றார்கள். எனவே 10ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்ற இது தொடர்பான வழக்குத் தீர்ப்பு இவர்கள் தலைவிதியைத் தீர்மானிக்க இருக்கின்றது.

அந்தத் தீர்ப்பு இவர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி அமையாவிட்டால் இப்படி சட்டத்திற்கு முரணாக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் அந்த வட்டாரத்திலிருந்து நீக்கப்பட்டு அந்த கட்சியின் வேட்டாளர் பெயர் இடைவெளியாக இருக்க தேர்தல் திட்டமிட்டபடி நடக்க இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிணைமுறி விவகாரம் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஐ.தே.காவுக்கு பெரும் பாதிப்பாக அமையும். அத்துடன் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கின்ற பிரபல பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரின் மகனுக்கு வேட்பு மனுவழங்க, சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

இந்த விடயம் தெரிய வந்தவுடன் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட அரசியல்வாதியைத் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் அவரின் பெயரைக் கடைசி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கின்றார். குறிப்பிட்ட வேட்டபாளர் வேட்பு மனு இறுதி நாளில் கொழும்பில் வாகனப்பேரணியைக் கூட ஒழுங்கு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

341 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8356 பேர் தெரிவாக இருக்கின்றார்கள். இது நடைமுறையில் மிகச் சிறிய எண்ணிக்கையில் மாற்றமடைய இடமிருக்கின்றது என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கின்றது.

கட்சிகள் நாட்டிலுள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் போட்டிக்கு வருகின்றது என்றால் கட்டுப்பணமாக 12534000.00 ரூபாய் செலுத்த வேண்டும் சுயேட்சைக் குழுக்கள் அனைத்து சபைகளுக்கு போட்டிக்கு வருக்கின்றது என்றால் அவர்கள்41780000.00 ரூபாய் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த முறை ஒப்பீட்டளவில் விண்ணப்பங்கள் குறைந்திருக்கின்றது என்று தெரிகின்றது.

இதற்கிடையில் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் தனித் தனி அரசாங்கங்களை அமைக்கப்போவதாக சொல்லி வருகின்றன.

Previous Post

பாதாள உலகக்குழு தலைவரின் மகன் : வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்

Next Post

ரவுப் ஹக்கீம் :மு. காங்கிரசை ரணிலிடம் அடகு வைத்துவிட்டாரா

Next Post

ரவுப் ஹக்கீம் :மு. காங்கிரசை ரணிலிடம் அடகு வைத்துவிட்டாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures