ஆரோவில் ஒரு சிறிய நகரமாக இருக்கலாம். ஆனால், உலக ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நகரமாக ஆரோவில் திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.வெளிநாட்டினர் அதிகம் வசித்து வரும் ஆரோவில் நகரம் உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இங்கு 164 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆரோவில் நிர்வாகம் சார்பில் இந்த நகரத்தின் 50-வதுஆண்டு பொன்விழா ஞாயிற்றுக்கிழமை(பிப்.25) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ஆரோவில் பொன்விழா தபால்தலையை வெளியிட்டு பேசுகையில்,“ உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று மகான் அரவிந்தர் கனவு கண்டார் அந்த கனவை நனவாக்கும் வகையில் அன்னை மீரா இந்த நகரை உருவாக்கினார். இது ஒரு சிறிய நகரமாக இருக்கலாம். ஆனால், உலக ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நகரமாக ஆரோவில் திகழ்ந்து வருகிறது” என்றார்.
பல்வேறு மதங்கள், இனங்கள் இருந்தாலும் உலகின் ஒட்டு மொத்த மக்களும் ஒன்றாக வாழ முடியும் என்பதை எடுத்து காட்டுவதாக இந்த நகரம் இருக்கிறது. ஆரோவில் கல்வி சமூக வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அது பாராட்டும் வகையில் இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.பொன்விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், புதுவை ஆளுநர் கிரண்பேடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அரவிந்தர், அன்னை மீரா சமாதியில் அஞ்சலி:
முன்னதாக, சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் புதுவை வந்தடைந்த பிரதமர், அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர், அன்னை மீரா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிரதமரின் வருகையையொட்டி புதுவை முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் 4 கம்பெனி துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மானிய விலையில் இருசக்கர வாகனம் :
தமிழ்நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் ‘அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ அறிமுக விழா சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை (பிப்.24) அன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வரவேற்றார். ஆளுநர் பன்வரிலால் புரோகித், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் ஐந்து பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.