ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் இராணுவ தளபதியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் பயங்கரவாதி என விமர்சித்துள்ளார்.
ஈரானின் உயரடுக்குப் படையின் முன்னாள் தலைவரான குவாசிம் சுலைமான் நேற்று அதிகாலை, அமெரிக்க திட்டமிட்டு நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவமானது உலக நாடுகளுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமெரிக்கா தனது பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ ரிசார்ட்டில் ஊடகங்களுக்கு உரையாற்றிய டிரம்ப், கொல்லப்பட்ட குவாசிம் சுலைமான் அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் மீது “உடனடி மற்றும் மோசமான தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டினார்.
“நாங்கள் ஒரு போரை நிறுத்த நேற்றிரவு நடவடிக்கை எடுத்தோம். ஒரு போரைத் தொடங்க நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்றிரவு எனது வழிகாட்டுதலின்படி அமெரிக்க இராணுவம் ஒரு குறைபாடற்ற துல்லியமான தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன்மூலம் உலகில் உள்ள “நம்பர் ஒன் பயங்கரவாதி” கொல்லப்பட்டான்.
“பல ஆண்டுகளாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சோலிமானியின் தலைமையின் கீழ் அதன் இரக்கமற்ற குட்ஸ் படை நூற்றுக்கணக்கான அமெரிக்க பொதுமக்கள் மற்றும் படைவீரர்களை குறிவைத்து, காயப்படுத்தி கொலை செய்துள்ளன.”
நேற்றிரவு அமெரிக்க செய்ததை நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும். அப்போது நிறைய உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று அவர் கூறினார்.
மேலும், உலகில் எங்கும் இல்லாத சிறந்த இராணுவம் அமெரிக்காவில் உள்ளது. உலகில் மிகச் சிறந்த உளவுத்துறை எங்களிடம் உள்ளது. அமெரிக்கர்கள் எங்காவது அச்சுறுத்தப்பட்டால், தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க நான் தயாராக இருக்கிறேன் எனப்பேசியுள்ளார்.

