நார்வேயில் உள்ள ஹால்டன் சிறை உலகிலேயே மனிதநேயமிக்க சிறையாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள கைதிகள் சமைப்பது, கல்வி கற்பது, வேலை செய்வது மற்றும் சிறை காவலரோடு நேரம் செலவிடுவது என ஒரு சாதாரண வாழ்க்கையைபோல சிறை தண்டனையை அனுபவிக்கின்றனர்.
இங்குள்ள அறைகளுக்கு கம்பிகள் இல்லை ஜன்னல்கள் தான் உள்ளன. சிலருக்கு முதன்முறையாக கல்வி கற்கும் வாய்ப்பு இங்குதான் கிடைத்துள்ளதாக சிறை அதிகாரிகள் பெருமிதத்துடன் கூறுகின்றனர். கைதிகள் சிறையிலிருந்து விடுதலை ஆகும்போது சிறந்த மனிதராக அனுப்ப வேண்டும் என்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே கைதிகள் மீண்டும் குற்றங்கள் புரிவதில் குறைவான விகிதமுள்ள நாடுகளில் நார்வேயும் ஒன்றாகும். ஆனால் கைதிகளுக்கு இத்தகைய சொகுசான வாழ்க்கையை ஏற்படுத்தி தருவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிறரை துன்புற செய்தவர் கட்டாயம் துன்புற வேண்டும் தான், ஆனால் இதுபோன்ற தவறுகளை கைதிகள் மீண்டும் செய்யாதிருக்கவே இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இங்குள்ள கைதிகளை அண்டை வீட்டாரைபோல் பார்ப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.