இரண்டு தடவைகள் உலக சம்பியனான ஆர்ஜன்டீனாவுக்கும் முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு குறிவைத்துள்ள குரோஷியாவுக்கும் இடையிலான கத்தார் 2022 பீபா உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டி லுசெய்ல் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (13) இரவு நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
உலகின் அதிசிறந்த கால்பந்தாட்ட விரருக்கான பெலன் டி’ஓர் விருதை வென்ற 10ஆம் இலக்க ஜேர்சிகளுடன் விளையாடும் இரண்டு வீரர்களும், உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இரண்டு தலைவர்களுமான லயனல் மெஸிக்கும் லூக்கா மொட்ரிச்சுக்கும் இன்றைய அரை இறுதிப் போட்டி மிக முக்கியம்வாய்ந்த போட்டியாக அமையவுள்ளது.
கால்பந்தாட்டத்தின் உயரிய வெற்றிக்கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு அவர்கள் இருவருக்கும் இது கடைசி சந்தர்ப்பமாக அமையவுள்ளது.
கால்பந்தாட்ட விளையாட்டு வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர் உலகக் கிண்ணத்தை தத்தமது நாட்டிற்கு வென்றுகொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் விளையாடிவரும் லயனல் மெசி, லூக்கா மொட்றிச் ஆகிய இருவரில் ஒருவரது அணிக்கே இறுதிப் போட்டிக்கு முன்னேறக் கூடியதாக இருக்கும்.
35 வயதான லயனல் மெஸியினதும் 37 வயதான லூக்கா மொட்ரிச்சினதும் உலகக் கிண்ண வாழ்க்கை இந்த வார இறுதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. அவர்களில் ஒருவர் உலகக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியிலும் மற்றையவர் 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியிலும் விளையாடவேண்டிவரும்.
அவர்கள் இருவரில் யாருக்கு இறுதிப் போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்பது இன்றைய முதலாவது அரை இறுதிப் போட்டி முடிவு தீர்மானிக்கும்.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் ஆர்ஜன்டீனாவும் குரோஷியாவும் மூன்றாவது தடவையாகவும் நொக்-அவுட் சுற்றில் முதல் தடவையாகவும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் 1998இல் முதல் தடவையாக சந்தித்துக்கொண்டபோது ஆர்ஜன்டீனா 1 – 0 என வெற்றிபெற்றிருந்தது. 10 வருடங்களின் பின்னர் ரஷ்யாவில் 2018இல் ஆர்ஜன்டீனாவை 3 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட குரோஏஷியா முன்னைய தோல்வியை நிவர்த்திசெய்துகொண்டது.
1978இலும் 1986இலும் உலக சம்பியனான ஆர்ஜன்டீனா 6ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுவதைக் குறியாகக் கொண்டு இன்றைய அரை இறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னர் 5 தடவைகள் அரை இறுதிகளில் விளையாடியுள்ள ஆர்ஜன்டீனா, ஒரு தடவையேனும் அந்த சுற்றில் தோல்வி அடைந்ததில்லை.
பிறேஸிலில் 2014இல் நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதியில் கடைசியாக விளையாடியிருந்த ஆர்ஜன்டீனா, அந்த வருடம் நெதர்லாந்தை பெனல்டி முறையில் (4 – 2) வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.
எவ்வாறாயினும் அண்மைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆர்ஜன்டீனாவின் பெறுபேறுகள் திருப்திகரமாக இல்லாததை அவதானிக்கலாம். ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே ஆர்ஜன்டீனா வெற்றிபெற்றுள்ளது. மற்றைய 6 போட்டிகளில் 3இல் தோல்வி அடைந்த ஆர்ஜன்டீனா, 3 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
இந்த வருட உலகக் கிண்ண முதல் சுற்றில் போலந்துக்கு எதிரான 2 – 0 என்ற வெற்றியே ஆர்ஜன்டீனா ஈட்டிய ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு எதிரான வெற்றியாகும். எவ்வாறாயினும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த 2 நொக்-அவுட் போட்டிகளில் ஆர்ஜன்டீனா பெனல்டி முறையில் வெற்றிபெற்றிருந்தது.
கத்தார் 2022 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஆர்ஜன்டீனாவின் பெறுபேறுகள் திருப்திகரமாக அமைந்தது என்று கூறமுடியாது.
சி குழுவில் சவூதி அரேபியாவுக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் ஆர்ஜன்டீனா 1 – 0 என இடைவேளையின்போது முன்னிலையில் இருந்தபோதிலும் இடைவேளையின் பின்னர் 5 நிமிட இடைவெளியில் 2 கோல்களைக் கொடுத்து முற்றிலும் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தது. இதன் காரணமாக ஆர்ஜன்டீனா அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் நிலவியது.
எனினும் அடுத்த 2 போட்டிகளிலும் மெச்சிகோவையும் போலந்தையும் தலா 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டதன் மூலம் ஆர்ஜன்டீனா 2ஆம் சுற்றுக்கு முன்னேறியது.
2ஆம் சுற்றில் அவுஸ்திரேலியாவை 2 – 1 என்ற கோல்கள் அடிப்படையிலும் கால் இறுதியில் நெதர்லாந்தை 2 (4) – 2 (3) என்ற பெனல்டி முறையிலும் வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது.
குரோஷியா
ரஷ்யாவில் 2018இல் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வி அடைந்து 2ஆம் இடத்தைப் பெற்ற குரோஏஷியா, 2ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முயற்சிக்கவுள்ளது.
குரோஷியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், இத்தாலி (1934, 1938), நெதர்லாந்து (1974, 1978), ஜேர்மனி (1982, 1986, 1990) ஆகிய நாடுகளுக்குப் பின்னர் தொடர்ச்சியாக 2 தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 4ஆவது ஐரோப்பிய நாடு என்ற பெருமையைப் பெறும்.
இந்த வருட உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் தோல்வி அடையாமல் இருக்கும் இரண்டு அணிகளில் குரோஷியாவும் ஒன்றாகும். மற்றைய அணி மொரோக்கோ ஆகும்.
எவ் குழுவில் மொரோக்கோவுடனான தனது ஆரம்பப் போட்டியை வெற்றிதோல்வியின்றி (0 – 0) முடித்துக்கொண்ட குரோஷியா, 2ஆவது போட்டியில் கனடாவை 4 – 1 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிகொண்டது. பெல்ஜியத்துடனான கடைசி போட்டியை (0 – 0) வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட குரோஏஷியா, அணிகள் நிலையில் 2ஆம் இடத்தைப் பெற்று 2ஆம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
2ஆம் சுற்றில் ஜப்பானை 1 (3) – 1 (1) என்ற பெனல்டி முறையில் வெற்றிகொண்ட குரோஷியா, கால் இறுதியில் முன்னாள் சம்பியன் பிரேஸிலையும் 1 (4) – 1 (2) என்ற பெனல்டி முறையில் வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
நான்கு வருடங்களுக்கு முன்னரும் 2ஆம் சுற்றிலும் கால் இறுதியிலும் குரோஷியா பெனல்டி முறைகளிலேயே வெற்றிபெற்றிருந்தது.
இது இவ்வாறிருக்க, இந்த வருடம் ஆர்ஜன்டீனாவினதும் குரோஷியாவினதும் பெறுபேறுகளை நோக்கும்போது இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய அரை இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள் (பெரும்பாலும் முதல் பதினொருவர் )
ஆர்ஜன்டீனா: எமிலியானோ மார்ட்டினெஸ், நோயல் மொலினா, சேர்ஜியோ ரொமீரோ, நிக்கலஸ் ஓட்டாமெண்டி, நிக்கலஸ் டெஜிலியாஃபிக்கோ, இஞ்ஞாசியோ பெர்னாண்டஸ், ரொட்றிகோ டி போல், அலெக்சிஸ் மெக் அலிஸ்டர், ஏஞ்சல் டி மரியா, லயனல் மெஸி (தலைவர்), ஜூலியன் அல்வாரெஸ்.
குரோஷியா: டொமினிக் லிவாகோவிச், ஜொசிப் ஜுரானோவிச், ஜிவார்டியோல், டேஜான் லோவ்ரென், போர்னா சோசா, லூக்கா மொட்றிச் (தலைவர்), மார்செலொ ப்ரோசோவிச், மெட்டியோ மரியோ கோவாசிச், பசாலிச், அண்ட்ரெஜ் க்ராமரிச், ஐவன் பெரிசிச்.