அவுஸ்திரேலியாவில் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தி, கடந்த காலங்களில் சாதிக்காத அணி என்ற அடையாளத்தை அகற்றுவதற்கு பங்களாதேஷ் முயற்சிக்கவுள்ளது.
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணத்தின் அங்குரார்ப்பண அத்தியாயத்திலிருந்து பங்களாதேஷ் தொடர்ந்து பங்குபற்றி வருகின்றபோதிலும் விளையாடியுள்ள 33 போட்டிகளில் 7 வெற்றிகளை மட்டுமே ஈட்டியுள்ளது.
நியூஸிலாந்தில் நடைபெற்ற நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் மும்முனை சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் பங்குபற்றிய பங்களாதேஷ் ஒரு போட்டியிலும் வெற்றிபெறவில்லை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேற்றைய (23) போட்டி உலகக் கிண்ண வரலாற்றில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்த நிலையில் அந்த அணிகள் இடம்பெறும் குழு 2இல் பங்களாதேஷூம் இடம்பெறுகிறது. அத்துடன் தென் ஆபிரிக்கா, நெதர்லாந்து, ஸிம்பாப்வே ஆகிய அணிகளும் இதே குழுவில் விளையாடவுள்ளன.
தமது சொந்த நாட்டை ஒத்ததான சுவாத்தியம் கொண்ட அவுஸ்திரேலியாவில் பங்களாதேஷ் விளையாடுவதால் அவ்வணிக்கு சாதகமாக அமையவுள்ளது.
எனினும் இந்த உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் மீண்டும் சோபிக்காமல் நாடு திரும்புமா? அல்லது என்றென்றும் நினைவில் நிறுத்தக்கூடிய சாதனையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கடந்த மூன்று உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் ஒரே விதமான 2 வெற்றிகளை பங்களாதேஷ் முதல் சுற்றில் ஈட்டியிருந்தது. ஆனால், அந்த மூன்று அத்தியாயங்களிலும் சுப்பர் சுற்றில் பங்களாதேஷினால் ஒரு வெற்றியைத்தானும் பதிவு செய்யமுடியவில்லை.
அந்த அத்தியாயங்களில் போலல்லாமல் இம்முறை நேரடியாக சுப்பர் 12 சுற்றில் பங்களாதேஷ் விளையாடுகின்றமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
பங்களாதேஷ் தனது ஆரம்பப் போட்டியில் நெதர்லாந்தை திங்கட்கிழமை (24) எதிர்த்தாடவுள்ளது. அப் போட்டியில் வெற்றி பெற்றால் பங்களாதேஷ் பெரும் உற்சாகம் அடைந்து மற்றைய போட்டிகளை சற்று நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இக் குழுவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளை பங்களாதேஷ் வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் ஏனைய நாடுகளுடன் பங்களாதேஷ் வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு
இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அங்குரார்ப்பண அத்தியாயம் பங்களாதேஷுக்கு மறக்க முடியாத ஒன்றாகும்.
தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அந்த அத்தியாயத்தில் கிறிஸ் கேல், ஷிவ்நரேன் சந்தர்போல், ரவி ராம்போல் போன்ற பிரபல வீரர்களை உள்ளடக்கிய மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணியிக்கப்பட்ட 165 ஓட்டங்களை பங்களாதேஷ் 18 ஓவர்களில் கடந்து வெற்றியீட்டி வரலாறு படைத்தது.
அப் போட்டியில் ஷக்கிப் அல் ஹன் 4 விக்கெட்களை வீழ்த்தியதுடன் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்தார்.
அடுத்த 3 அத்தியாயங்ளில் ஒரு வெற்றியையும் சுவைக்க முடியாமல்போன பங்களாதேஷுக்கு 2014இல் 2 வெற்றிகள் கிட்டின.
ஆப்கானிஸ்தானையும் நேபாளத்தையும் வெற்றிகொண்ட பங்களாதேஷ் கடைசி முதல் சுற்று ஆட்டத்தில் ஹொங் கொங்கிடம் தோல்வி அடைந்தது. அந்த வருடம் சுப்பர் சுற்றுக்கு முன்னேறிய பங்களாதேஷ் நான்கு போடடிகளிலும் தோல்வி அடைந்தது.
2016இலும் அதே நிலைதான் பங்களாதேஷுக்கு ஏற்பட்டது.
கடந்த வருடம் ஸ்கொட்லாந்திடம் முதல் சுற்றில் தோல்வி அடைந்த பங்களாதேஷ், மற்றைய இரண்டு போட்டிகளில் ஓமான், பப்புவா நியூ கினி அணிகளை வெற்றிகொண்டு சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. அங்கு 5 போட்டிகளிலும் தொல்வி அடைந்து வெளியேறியது.
அண்மைக்கால பெறுபேறுகள்
உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையில் மேற்கிந்தியத் தீவுகளுடன் கடந்த ஜூலை மாதம் சர்வதேச இருபது தொடரில் பங்களாதேஷ் விளையாடியது. அந்தத் தொடரில் 0 – 2 என தோல்வி அடைந்த பங்களாதேஷ், தொடர்ந்து நடைபெற்ற ஸிம்பாப்வேயுடனான தொடரிலும் 1 – 2 என தோல்வி அடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட்டிலும் பங்களாதேஷுக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்தது. முதல் சுற்றில் 2 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தானிடமும் இலங்கையிடமும் தோல்வி அடைந்தது.
அதன் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான தொடரில் 2 – 0 என வெற்றிபெற்ற பங்களாதேஷ், நியூஸிலாந்தில் நடைபெற்ற மும்முனை தொடரில் 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
ஒட்டுமொத்தத்தில் கடந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் பங்களாதேஷ் விளையாடிய 18 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 4இல் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.
சிறந்த வீரர்கள்
கடைசியாக நடைபெற்ற உலகக் கிண்ண அத்தியாயத்தின் பின்னர் அனுபவசாலியும் மூத்த வீரருமான ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்துள்ளனர்.
மேலும் ஷக்கிப் அல் ஹசன் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய மொத்த விக்கெட்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் டிம் சௌதீக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
எனினும் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியினர் சிறந்த ஆரம்பங்களை இட்டுக்கொடுக்காதது அணியில் பிரச்சினையாக இருந்து வருகிறது. நியூஸிலாந்தில் நடைபெற்ற மும்முனை தொடரில் ஆரம்பத் துடுப்பாட்டத்தில் 4 வெ வ்வேறு ஜோடியினர் முயற்சிக்கப்பட்டிருந்தனர்.
அத் தொடரில் சௌம்யா சர்க்கார் திறமையாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார்.
அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் (2199 ஓட்டங்கள், 12 அரைச் சதங்கள், 122 விக்கெட்கள்), லிட்டன் தாஸ் (1261 ஓட்டங்கள், 7 அரைச் சதங்கள்), சௌம்யா சர்க்கார் (1163 ஓட்டங்கள், 5 அரைச் சதங்கள்), அபிப் ஹொசெய்ன் (998 ஓட்டங்கள், 3 அரைச் சதங்கள்), முஸ்தாபிஸுர் ரஹ்மான் (94 விக்கெட்கள்) ஆகியோர் முன்னணி வீரர்களாகத் திகழ்கின்றனர்.
அவர்களுடன் ஈபாடொத் ஹொசெய்ன், ஹசன் மஹ்முத், மெஹிதி ஹசன் மிராஸ், மொசாடெக் ஹொசெய்ன், நஜிமுல் ஹொசெய்ன் ஷன்டோ, நாசும் அஹ்மத், நூருள் ஹசன், ஷொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத், யாசிர் அலி ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.