ராமநாதபுரம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்து வருவதாக நடிகர் கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ், பாதுகாப்பு இல்லாததால் தான் தன்னால் தொகுதிக்கு செல்ல முடியவில்லை எனவும், இதற்கு அமைச்சர் மணிகண்டன் தான் காரணம் எனவும் கூறியிருந்தார். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ”கருணாஸ் மீது தாக்குதல் சம்பவம் ஏதும் நடக்கவில்லை” என மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு தென்மாவட்டங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததைத் தொடர்ந்து தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எனக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். இதன் காரணமாக எனது திருவாடானை தொகுதிக்குள் செல்லும் போதெல்லாம் ஜெயலலிதா உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதனை அப்போது ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்த எஸ்.பி மணிவண்ணன் தொடர்ந்து முறையாகப் பின்பற்றி வந்தார். அவரது மாறுதலுக்குப் பிறகு தமிழக அமைச்சர் மு.மணிகண்டன் கூறியதால் தற்போது எஸ்.பி-யாக பணியாற்றி வரும் ஓம்பிரகாஷ் மீனா எனக்குப் பாதுகாப்பு அளிக்க மறுத்து வருகிறார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், உளவுத்துறை ஆய்வாளர்கள் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் போது ஒரு முறையும், கடந்த 23.4.2018 ஆம் தேதி தொகுதியின் குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கொரிய நாட்டு விஞ்ஞானிகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆலோசனை நடத்திய போதும் பாதுகாப்பிற்காக போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். என்னுடன் வந்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே அப்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு பலமுறை பாதுகாப்பு கேட்டும் எனக்குப் பாதுகாப்பு தரப்படவில்லை. கடந்த 25.2.2017-ம் தேதி திருவாடானையில் எனக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அச்சமயம் போலீஸார் ஒரு திருமண மண்டபத்துக்குள் அடைத்து வைத்தனர். அப்பகுதியை நான் கடக்கும் போது பாட்டில்களும், கற்களும் வீசப்பட்டது. இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கடந்த 19.3.2017-ம் தேதி சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி அவதூறாகச் செய்திகள் வெளிவந்தது தொடர்பாகவும், இரவில் சிலர் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராமநாதபுரம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா நான் இதுவரை காவல்நிலையத்தில் எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவலைத் தெரிவித்துள்ளார். கடந்த 21.11.2017-ம் தேதியும் எனக்குத் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் இக்கால கட்டடங்களில் தொகுதி மக்கள் மற்றும் எனது உறவினர்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க பலமுறை வந்த போதும் எனக்குப் பாதுகாப்பு தரப்படவே இல்லை. போலீஸ் பாதுகாப்பு தரப்படாத நிலையில் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகக் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானதாகும். எனது பாதுகாப்பிற்கு புலிப்படை நிர்வாகிகள், தொண்டர்களே போதும். ஆனால் என்னால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதை வலியுறுத்துகிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.