ஊர்காவற்றுறை மெரிஞ்சிமுனைப் பிரதேசத்தில் தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவை உண்ட 109பேர் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 75 பேர் வரையில் நேற்று மாலையே வீடு திரும்பினர். உணவு ஒவ்வாமையால் இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவித்தன.
ஊர்காவற்துறை மெரிஞ்சிமுனைப் பிரதேசத்தில் தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் பெருநாள் இடம்பெற்றது. கலந்துகொண்ட பக்கத்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இவற்றைச் சாப்பிட்டவர்களில் 109பேர் மயக்கம் மற்றும் வாந்திபேதி காரணமாக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் 52 பெண்கள், 36 ஆண்கள், 21 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கர்பிணிப் பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
உணவு ஒவ்வாமையினால் இந்த நிலமை ஏற்பட்டிருக்கலாம் என்று ஊர்காவற்துறை வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவித்தன. அத்துடன், தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவை சுகாதாரத்துறையினர் ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் தேவாலய குருமுதல்வர் பத்திநாதன் தெரிவித்தாவது, எமது தேவாலயத்தின் பெருநாள் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் இரண்டு குடும்பங்கள், ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களுக்கு உணவினை வழங்கினார்கள். உணவினை உண்டவர்களில் பலருக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. உணவினால்தான் இது ஏற்பட்டது என்று மருத்துவ அறிக்கை வர முன்னர் எம்மால் கூறமுடியாது.
பெருநாளில் ஐஸ்கிரீம், சர்பத் என்று பல பண்டங்களையும் மக்கள் சாப்பிட்டனர். இப்பொது உணவுப் பொதியை ஆய்வுக்காக சுகாதாரப் பிரிவினர் எடுத்துச் சென்றுள்ளனர் – என்றார்.
இதேவேளை வாந்திபேதிக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில் பலர் நேற்று மாலையிலேயே சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் தற்போது 30 வரையானோரே சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களின் உடல்நிலையும் முன்னேற்றமாக உள்ளது என்று ஊர்காவற்துறை வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவித்தன.
எமது வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்களும் எட்டு தாதியர்களுமே கடமையாற்றுகின்றனர். இந்த இடரின்போது மக்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சையை வழங்குவதில் பெரிய சவாலை எதிர்கொண்டோம் என்று வைத்தியசாலைத் தரப்புக்கள் குறிப்பிட்டன.