உலகளாவிய ரீதியில் உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் முறையே லெபனான், சிம்பாவே, வெனிசூலா, துருக்கி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இலங்கை 5 ஆவது இடத்தில் இருப்பதுடன் அதன் ஆண்டுக்கு ஆண்டு சராசரி உணவுப்பணவீக்கமானது 91 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் உணவுப்பணவீக்கம், உணவுப்பொருட்களுக்கான கேள்வி மற்றும் நிரம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு அந்நாடுகளின் உணவுப்பாதுகாப்பு நிலை எவ்வாறான மட்டத்தில் உள்ளது என்பதை மதிப்பீடு செய்து, அதனை அடிப்படையாகக்கொண்டு உலக வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இலங்கை மேற்குறிப்பிட்டவாறான நிலையிலிருப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
நாடு கடந்த சில மாதங்களாகப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால் உணவு மற்றும் உணவல்லாப்பணவீக்கம் என்பன வெகுவாக உயர்வடைந்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த சில மாதங்களில் உலகநாடுகளில் அவதானிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலையேற்றம், அவற்றுக்கான கேள்வி, நிரம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி அதன் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. அதில் லெபனான், சிம்பாவே, வெனிசூலா, துருக்கி, இலங்கை, ஈரான், ஆர்ஜென்டீனா, சூரிநாம், எதியோப்பியா மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் முறையே (சதவீதம்) 332, 309, 155, 95, 91, 90, 66, 38, 38, 34 என்ற ஆண்டுக்கு ஆண்டு சராசரி உணவுப்பணவீக்கத்துடன் 1 – 10 என்ற வரிசைப்படுத்தலில் உள்ளது.
இதுஇவ்வாறிருக்க 2022 ஜுலை மாதமாகும்போது தெற்காசியாவிலுள்ள பெரும்பாலான நாடுகளின் உணவுப்பணவீக்கம் உயர்வாகப் பதிவாகியிருப்பதாகவும், குறிப்பாக ஜுலையில் பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்நாட்டு உணவுப்பொருள் நிரம்பலில் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்திருந்ததாகவும் உலக வங்கி அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் உரத்தட்டுப்பாட்டின் விளைவாக இலங்கையின் விவசாய உற்பத்திகள் 40 – 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததுடன் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமான வெளிநாட்டு நாணயக்கையிருப்பிற்குப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அதன்படி இலங்கையின் உணவுப்பணவீக்கம் 80 சதவீதமாக உயர்வடைந்ததாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.