Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உடல் சோர்வடைந்த நிலையில் காணாமல் போனவர்களின் உறவுகள் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!

January 26, 2017
in News
0

உடல் சோர்வடைந்த நிலையில் காணாமல் போனவர்களின் உறவுகள் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!

வவுனியாவில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காணாமல் போனவர்களின் உறவுகள் தமது உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

குறித்த வேண்டுகோளினை தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினரே விடுத்துள்ளனர்.

குறித்த வேண்டுகோளில்,

கதவுகள் திறவாதோ! நீதியும் கிட்டாதோ!!

போகாத கோயில்களில்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஏறாத படிகள் இல்லை. தட்டாத கதவுகள் இல்லை. விழாத கால்கள் இல்லை. கெஞ்சாத ஆட்கள் இல்லை. ஆனால் பதில் சொல்லத்தான் யாருமில்லை!

a

எங்கள் பிள்ளைகளையும், கணவனையும், தந்தையையும், மனைவியையும், தங்கையையும், அண்ணனையும், தம்பியையும், அக்காவையும், தாயையும் இன்னும் கிட்டத்து உறவுகளையும், தூரத்து உறவுகளையும் நித்தம் நித்தம் தேடி அவர்களுக்காக அழுது கண்களும் வற்றிவிட்டன. கால்களும் தேய்ந்து போயின. உடலும் சோர்ந்துவிட்டது. வாழ்க்கையும் வெறுத்துவிட்டது.

aa

நாங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு எங்களது இதயத்தைப் பிளந்தால்தான் தெரியும் என்றால், ‘நாங்கள் இருக்கும் இந்த உண்ணாவிரதத்தில் எங்களில் யாரேனும் மரணித்தால் அவர்களது இதயத்தை அறுத்துப் பாருங்கள்’ அதில் நாங்கள் தேடியலைபவரின் உருவம் தெரியும். அப்பொழுதாவது அரசாங்கத்தின் மனம் இரங்குகிறதா? என்று பார்ப்போம்.

நாட்டைப் பாதுகாப்பவர்கள் என்று சொன்னவர்கள், ‘உங்களது பிள்ளைகள் ஒருநாள் புலிகள் இயக்கத்தில் இருந்தாலும் சரணடையச் சொல்லுங்கள். நாங்கள் பிடித்தால் கடுமையான தண்டனை கிடைக்கும். சரணடைந்தால் மூன்று மாத புனர்வாழ்வின் பின்னர் உங்களிடம் மீண்டும் கொண்டுவந்து தருகிறோம் என்றார்கள்.

aaa

இடம் பெயர்ந்து முகாமில் தங்கியிருந்தபோதும் எமது வாக்குகளால் அன்று மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரானவரும் அதே வேண்டுகோளை விடுத்தார்.

அத்துடன் அனைவருக்கும் தான் பொறுப்பு என்றும் சொன்னார். அவர்கள் நேர்மையானவர்கள் என்று எண்ணி எமது அன்பிற்குரியவர்களை அவர்களிடம் ஒப்படைத்தோம். காலங்கள் சென்றன. அவர்கள் எமது அன்பிற்குரியவர்களை காணாமல் ஆக்கியுள்ளார்கள். இன்றுவரை இலங்கை ஆட்சியாளர்கள் முதல் ஐ.நா சபை உயர் அதிகாரிகள் வரை அனைவரும் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

aaaa

மற்றொரு சிலம்பை உடைத்து எங்களது நேர்மையை நிரூபித்து நியாயம் கேட்பதற்கு எங்களிடம் காற்சிலம்புமில்லை. நாங்கள் சிலம்பைத் தொலைக்கவுமில்லை. களவாடவுமில்லை.

நாங்கள் தொலைத்தது மனிதர்களை! எம் அன்பிற்குரியவர்களை அரச படைகளிடம் கையளித்து தொலைத்து நிற்கிறோம். தர்மம் பிழைத்ததற்காக நீதி கேட்டு, நாங்கள் மீண்டும் மதுரையை எரித்த கண்ணகியாக மாற விரும்பவுமில்லை. நீதி தேவதை தன் கண்களைத் திறந்து எம்மை நோக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவள் கண்களைக் கட்டியுள்ள துணி அவிழ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.

எம் மடியில் உருண்டு புரண்ட எம் அன்பிற்குரியவர்களை எம்மிடம் திரும்பத்தாருங்கள் என்றே கேட்கிறோம்.

எங்கள் கோரிக்கையின் நியாயம் இன்னமும் உங்களுக்குப் புரியாமல் இருப்பதால் இனி இந்த மண்ணில் வாழ்வதில் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டோம். ‘எங்களது மரணம்தான் உங்களது மனக்கண்ணை திறக்கும் என்றால் அது இப்பொழுதே நடக்கட்டும்’

மிகவும் சாத்வீகமான வழியில் உணவைத் தவிர்த்து எங்கள் உடலை வருத்தி நியாயம் கேட்கிறோம்.

அன்புள்ளங்களே!

எங்களுக்காக நீங்கள் செய்ய வேண்டிய கடமையொன்று உள்ளது. அதைச் செய்ய வேண்டும் என்று உங்களிடம் மன்றாடுகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்தின்படி காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் தொடர்பாக உண்மைநிலையை எதுவித காலதாமதமும் இன்றி வருகின்ற கூட்டத்தொடரில் எழுத்துமூலம் வெளிப்படுத்த வேண்டும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் என்றும் யுத்தக்குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்.

ஐ.நா சபை செயலாளர் நாயகம், ஐ.நா பாதுகாப்புச் சபை, ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகம் மற்றும் அனைத்து நாடுகளின் தூதரகத்திற்கும், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும், அனைத்து சமூக வலைதளங்கள் ஊடாகவும், முகநூல் ஊடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும், இணையதளங்கள் ஊடாகவும், ட்வீட்டர், வாட்ஸ்அப், வைபர் போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஊடாகவும் கோரிக்கைகளை முன்வையுங்கள்.

எமது அன்புமிக்க தமிழக உறவுகளே! இதனை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் தமிழனின் அடையாளமாம் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கும், அதனூடாக பல்தேசியக் கம்பெனிகளின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது அந்தப் போராட்டத்துடன் இதனையும் முன்னெடுங்கள்.

உலகம் முழுவதிலுமுள்ள மனிதநேயம் உள்ளவர்களும் இனம், மொழி, மதம், சாதி, நாடு கடந்து, இந்தப் பணியை சிரமேற்கொண்டு முன்னெடுத்தால் நிச்சயமாகப் பலன்கிட்டும். எமது உறவுகளின் வருகைக்காக நாம் எமது உயிரைத் தருவதற்கும் தயாராகிவிட்டோம். ஒருவேளை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நாங்கள் மரணிக்க நேரிட்டால் எங்களது வாரிசுகளை தன்மானமிக்க நற்பிரஜைகளாக வளர்த்தெடுங்கள். அவர்களாவது இந்த நாட்டில் சமத்துவமாகவும் சகோதரத்துவத்துடனும் வாழட்டும்!

Previous Post

இன்டர்நெட் இல்லாமலே இனி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பலாம்!

Next Post

இராணுவ கட்டமைப்புக்குள் தொடர்ந்தும் தமிழர்கள்..! பாராளுமன்றில் குற்றச்சாட்டு

Next Post

இராணுவ கட்டமைப்புக்குள் தொடர்ந்தும் தமிழர்கள்..! பாராளுமன்றில் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures