தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டால் மாத்திரமே அவர்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிந்திக்க முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி இணைய விரும்பினால் அதனை பரிசீலிக்கத் தயார் எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார்.
குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும் சுமந்திரன் கூறியுள்ளதாவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கூட்டமைப்புக்கு யாப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலமே சிறந்த பெறுபேற்றை எதிர்பார்க்க முடியும் எனவும், தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய ஆணையை கூட்டமைப்பு தூக்கி எறிந்து செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.
இதனை தாம் பல தடவை வலியுறுத்தியும் கூட்டமைப்பு யாப்பை உருவாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
ஆகவே எதிர்வரும் காலங்களில் இந்த இரண்டு விடயங்களிலும் தீர்க்கமான முடிவை கூட்டமைப்பு எடுத்தால் மாத்தரமே இணைவு குறித்து பரீசிலிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஈ.பி.ஆர்.எல்.எப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கூட்டமைப்பிற்கு யாப்பு ஒன்று அவசியம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.