ஈழத் தமிழருக்கு ஏமாற்றம் உறுதியானது..!! ஐ.நாவில் உறுதிப்படுத்திய இலங்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக, இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜெனிவா சென்றுள்ள இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலர் மனோ தித்தவெல இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற முடியும் என்று சிறிலங்கா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், புதிய தீர்மானம் ஒன்று அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இணை அனுசரணையுடன் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜெனிவாவில் நேற்று நடந்த பக்க அமர்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட மனோ தித்தவெல, காணிகள் விடுவிப்பை துரித்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பக்க அறை அமர்வில் பங்கு பற்றிய ஈழத் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததுடன் கால அவகாசம் வேண்டாம் என அழுத்தமாக கூறியமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கால அவகாசம் வழங்கக் கூடாது என கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அரசின் இந்நடவடிக்கைக்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு ஈழத்தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றியதன் நீட்சியே இந்நடவடிக்கை என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.