ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் சதர் மாவட்டத்தில் ஷியா பிரிவினருக்கான மசூதி ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஆயுத குழு வீடு ஒன்றில் ஆயுதங்களை சேமித்து வைத்து ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளது. இங்கு ராக்கெட், எறிகுண்டுகள் உள்ளிட்ட சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. இந்நிலையில், நேற்று இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெடி விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.