இஸ்ரேல் யூத மக்களுடைய நாடு என வரையறுக்கும் சட்டம் ஒன்று இஸ்ரேல் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இஸ்ரேலில் உள்ள அரபு பிரஜைகள் மீது பாகுபாட்டை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 8 மணி நேர விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு 62 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
இந்த சட்டத்தை இனவாதம் கொண்டது என அரபு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலஸ்தீனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது குழப்பம் ஏற்பட்டதோடு, இது இனப்பாகுபாட்டை சட்டமாக்குவதாகவும் குரல்கள் எழுந்தது.
இந்த சட்டத்தில் ஹிப்ரூ இஸ்ரேலின் தேசிய மொழி என அங்கீகரிக்கப்பட்டதோடு, யூத நலன்களே தேசிய நலன் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசின் உத்தியோகப்பூர்வ மொழியாக இருந்து வந்த அரபு மொழி இஸ்ரேல் அரசின் செயல்பாட்டிற்குள் தலையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு “சியோனிஸ் மற்றும் இஸ்ரேல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தருணம் இது” என்று கூறினார். மேலும், இஸ்ரேல் தேசத்தின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தருணம் இது” என்றும் அவர் கூறினார். இஸ்ரேலிய வரலாற்றில் வலதுசாரி கட்சியான நெதன்யாகுவின் அரசு பாராளுமன்றத்தின் கோடைகால அமைர்வு முடிவதற்குள் இந்த சட்டத்திற்கு ஒப்புதலை பெற முயற்சித்து வந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உள்ள அரபு உறுப்பினர்கள் இந்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சட்டத்தின் பல்வேறும் சரத்துகளும் பல ஆண்டுகளாக விவாதத்திற்கு உள்ளாகி வந்தது. இஸ்ரேலில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 17.5 சதவிகித்ததினர் அரபு பிரஜைகளாக உள்ளனர். தற்போது இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இயற்ற்றப்பட்ட சட்டம் இவர்களுக்கான உரிமைகளை பறிப்பதுடன், பிளவுகள் ஏற்படவும் வாய்ப்பைகளை ஏற்படுத்தி உள்ளது.
“யூத மேலாதிக்கத்திற்காக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், நாம் எப்போதும் இரண்டாம் தர பிரஜைகள் என்பதை குறிப்பிடுவதாக உள்ளது” என்று அரபு கூட்டணியின் தலைவர் ஐமன் ஒதேஹ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“ஜனநாயகத்தின் அதிர்ச்சி மற்றும் துக்ககரமான மரணத்தை நான் அறிவிக்கிறேன்” என்று மற்றொரு அரபு எம்.பியான அஹ்மத் திமி குறிப்பிட்டார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலர் இந்த சட்டத்திற்கு எதிராக குரலெழுப்பினர்.
இஸ்ரேல் பிரஜைகள் மீதான இந்த சட்ம் இனவாதம் கொண்டது என்று கூறியபடி அரபு பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலத்தின் பிரதிகளை கழித்து எறிந்தனர்.
1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அதன் எல்லைக்குள் எஞ்சி இருந்த பலஸ்தீன சந்ததியினரே தற்போது இஸ்ரேலின் அரபு பிரஜைகளாக உள்ளனர். இஸ்ரேல் உருக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தமது பூர்வீக நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

