ட்ரம்பின் சமாதான நடவடிக்கைக்கான அழைப்பின் பின்னால், சதி முயற்சியொன்று காணப்படுவதாக ஈரான் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று நேற்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை ஊடாக அமெரிக்கா விடுத்த அழைப்பின் பின்னால், டிரம்ப் நிர்வாகத்தின் ஏதோ சதி இருக்கக் கூடும் என்றும் ஈரான் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்கா எங்களுக்கு பதிலடி கொடுத்தால் இஸ்ரேல் மீதும் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கூறியுள்ளதானது இஸ்ரேலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள சுலேமானி தலைமை வகித்த ஈரான் புரட்சிகர இராணுவப் படைப் பிரிவு, “இந்த குற்றத்தில் நாங்கள் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பிரித்து பார்ப்பதில்லை” என்று கூறியுள்ளது.
ஈரானுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தால் இஸ்ரேலை ஹிஸ்புல்லா படைகள் தாக்கும் என்று ஈரானை சேர்ந்த ஒரு கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதுபோன்ற ஒரு தாக்குதலுக்கு ஈரான் முயற்சி செய்தால் கூட அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலைமை ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் தொடர்ந்தால் இறுதியில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுக்கும் என்று ஜெருசலேம் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

