வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாகக் கோரி வரும் நிலையில், தற்போது இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் வாள்வெட்டுச் சம்பவங்கள் இராணுவத்தினரைத் தொடர்ச்சியாக நிலை நிறுத்தும் வகையில் உள்ளன.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்.
புத்தூர் கிராம சபையின் முன்னாள் உப தலைவர் அரியகுட்டியின் உருவச்சிலை திறப்பும் நூற்றாண்டு நாள் நிகழ்வும் ஆவரங்கால் ஆதவன் மண்டபத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. அதில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது இளைஞர்கள் போதைப் பொருள் பாவனை, மது எனச் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். வாள்வெட்டுப் போன்ற சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பொலிஸாரும் அவற்றைக் கட்டுப்படுப்படுத்தாது அசமந்தமாக உள்ளனர்.
இவற்றைச் சுட்டிக்காட்டும் சிலர் இராணுவம் இங்கு தொடர்ந்தும் நிலை கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். எமது இளைய சமூகம் சிந்தித்துச் செயலாற்றாவிட்டால் இராணுவத்தினரை அகற்ற முடியாத நிலைமையே ஏற்படும் – என்றார்.
நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது, எமது சமூகத்தின் மீது தற்போதும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதற்கு எதிராக எமது சமூகம் போராட வேண்டும். எம்மில் பலர் பிரதேச வேறுபாடு பார்க்கின்றனர். அவ்வாறான பிரிவினைவாதம் நீங்க வேண்டும். அனைவரும் தமிழர் என்ற ரீதியில் ஒன்று பட வேண்டும் – என்றார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

