மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது முச்சக்கர வண்டியை 24 மணி நேரமும் நோயாளர்களை அழைத்துச் செல்லும் இலவச அம்பியூலன்ஸ் வண்டியாக பயன்படுத்தி வருகிறார்.
அக்குரஸ்ஸ, இலுப்பெல்ல கிராமத்தை சேர்ந்த சமிந்த சிசிர குமார என்ற இந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை. இவர் தனது வாழ்வாதார தொழிலாக முச்சக்கர வண்டியை ஓட்டி வருகிறார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த மக்கள் நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டுமாயின் சமிந்த சிசிர குமாரவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தால் போதும். அவர் அழைத்த இடத்திற்கு உடனடியாக சென்று, இலவசமாக நோயாளியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வார் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இலவசமாக இவர் சேவை செய்து வருவதால், சிலரது அவமதிப்புகளால் சில சந்தர்ப்பங்களில் கசப்பான அனுபவங்களை எதிர்நோக்கியுள்ளார்.
இலவசமாக தான் செய்து வரும் சேவை குறித்து கருத்து வெளியிட்டுள்ள சம்பத் சிசிர குமார,
“ நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பித்தேன். நாம் பிறந்து இறக்கும் மனிதர்கள். இறக்கும் போது நாம் வாழ்நாளில் செய்தவைகளை மட்டுமே எம்முடன் எடுத்துச் செல்வோம்.
இதனால், நாம் நல்ல பணிகளை செய்ய வேண்டும். இதன் காரணமாகவே இப்படியான சேவையை ஆரம்பிக்க எண்ணினேன்.
நான் இந்த சேவையை செய்யும் போது சில நேரம் ஏமாற்றப்படுகிறேன். என்னை அவமதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் இதற்கு முன்னர் நடந்துள்ளன.
எனக்கு அப்படி செய்ய வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி செய்பவர்களுக்கு எனது உதவி சில நேரம் தேவைப்படக் கூடும்” எனக் கூறியுள்ளார்.
மனித சமூகத்தில், மனிதாபிமானத்தை மறந்து பணத்திற்கு பின்னால் ஓடி திரியும் இந்த காலத்தில் அக்குரஸ்ஸ சமிந்த சிசிர குமார உலகத்திற்கு முன்னுதாரணமாவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.