ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வரலாற்றைக் கொண்ட இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டி Countdown to the Middle East Crown Series 05 என்ற பெயரில் கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கையில் உண்மையான தொழில்முறையில் விளையாடப்படும் கிரிக்கெட்டைப் போன்று ஏனைய விளையாட்டுக்களில் முன்னேற்றத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சவால் மிக்க முயற்சியில் துபாயை தளமாகக் கொண்டு செயல்படும் இலங்கை தொழில் அதிபரும் குத்துச்சண்டை பிரியருமான டன்ஸ்டன் போல் ரொசைரோ இறங்கியுள்ளார்.
இந்த நோக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டே முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டியை இலங்கையில் நடத்த டன்ஸ்டன் ரொசைரோ முன்வந்துள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கு உதவும் வகையில் விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முதல் முயற்சியாக இந்த சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக DJMC Events Dubai நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதிபருமான டன்ஸ்டன் போல் ரொசைரோ தெரிவித்தார்.
இப் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் சில வருடங்களாக நடத்தப்பட்டுவந்ததாக குறிப்பிட்ட அவர், துபாய்க்கு வெளியே இப் போட்டி நடத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவை என்றார்.
‘இப் போட்டி கடந்த காலங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள்ளேயே நடத்தப்பட்டு வந்தது. இந்த வருடம் இப் போட்டியை இந்தியாவில் நடத்த ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தோம். அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியாவும் உறுதி அளித்திருந்தது. எனினும் எனது தாய் நாடான இலங்கைக்கு பிரதியுபகாரமாக, குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் Countdown to the Middle East Crown Series 05 சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டியை இலங்கையில் நடத்த தீர்மானித்தேன். இப் போட்டி மூலம் இலங்கைக்கு கணிசமான அந்நிய செலாவணியை கிடைக்கச் செய்வதே எனது பிரதான நோக்கம். இந்தப் போட்டியை இங்கு நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஹான் ரணசிங்கவின் பூரண ஆதரவு கிடைத்துள்ளது’ என துபாயில் கடந்த 33 வருடங்களாக வாழ்ந்துவருபவரும் தெஹவிளை புனித மரியாள் கல்லூரியின் முன்னாள் குத்துச்சண்டை வீரருமான ரொசைரோ குறிப்பிட்டார்.
இப் போட்டியில் இலங்கை, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த 18 குத்துச்சண்டை போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கையில் இருந்து நிராஜ் விஜேவர்தன, கௌமினி கமகே, தரிந்து ரொஷான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
உலக தரவரிசையில் 13ஆவது இடத்தையும் இந்தியாவில் 1ஆவது இடத்தையும் வகிக்கும் முதலாவது மத்திய கிழக்கு ஆசிய உலக சாம்பியனான ஊர்வசி சிங், இளைஞர் உலக தரவரிசையில் இடம்பெறுபவரும் சர்வதேச குத்துச்சண்டை சங்க போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும் உலக சம்பியனும் மற்றும் சிரேஷ்ட உலக சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சார்ஜுபாலா தேவி மற்றும் உலக குத்துச்சண்டை பேரவை ஆசிய சம்பியன் சச்சின் டெக்வால் ஆகியோர் இந்தியா சார்பாக பங்குபற்றவுள்ளனர்.
Countdown to the Middle East Crown Series 05 போட்டி தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிட்ட டன்ஸ்டன் போல் ரொசைரோ,
‘இப் போட்டித் தொடரை மிகுந்த எதிர்பார்ப்புடன் 2018இல் நாங்கள் முதன்முதலில் ஆரம்பித்தோம். எனினும் 2019, 2020 ஆகிய வருடங்களில் கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக சிறு தடங்கல் ஏற்பட்டது. ஆனால், நாங்கள் எமது முயற்சியைக் கைவிடவில்லை.

‘குத்துச்சண்டை விளையாட்டில் பெரிய பெரிய விடயங்களை செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக எங்களது நிறுவனத்தை இன்று முழு உலகமும் பார்க்கிறது. அது எங்களை உற்சாகப்படுத்துகிறது. இந் நிலையில் இப் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியதிற்கு கொண்டு செல்வது குறித்து அந் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய அனுமதியைப் பெற்றுக்கொண்டேன். அதன் பலனாகவே இன்னும் சில வராங்களில் இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டி நடத்தப்படவுள்ளது.
‘இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் இப் போட்டியை வெற்றிகரமாக நடத்தவுள்ளோம். இலங்கையிலுள்ள குத்துச் சண்டை வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை இப் போட்டி ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது.
‘இலங்கையின் முன்னாள் குத்துச்சண்டை சம்பியன்கள், வீரர்கள் அனைவரும் இந்த குத்துச்சண்டை போட்டியை கண்டுகளித்து பூரிப்படைவார்கள் என நம்புகிறேன். அதேவேளை, அடிமட்டத்திலிருந்து குத்துச்சண்டையை நாம் வளர்ப்பது அவசியமாகும். பாடசாலைகள் மற்றும் கழகங்களில் குத்துச் சண்டை விளையாட்டை வியாபிக்கச் செய்து குத்துச்சண்டை போட்டிகளை நடத்த வேண்டும். அதன் மூலம் சிறந்த வீர, வீராங்கனைகளை உருவாக்கக்கூடியதாக இருக்கும். அங்கிருந்து அவர்கள் சர்வதேச அரங்குளில் இலங்கைக்கு புகழீட்டிக்கொடுக்க சந்தர்ப்பம் உருவாகும்’ என்றார்.

இதேவேளை, சர்வதேச தொழில்சார் குத்துச்சண்டை போட்டியை இலங்கையில் நடத்த முன்வந்த DJMC Events Dubai நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதிபருமான டன்ஸ்டன் போல் ரொசைரோவை பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுக்கக்கூடிய அலைச்சறுக்கல், கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் உட்பட இன்னும் பல விளையாட்டுப் போட்டிகளையும் பல்வெறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யுமாறு ரொசைரோவிடம் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறான போட்டிகளை நடத்துவதன் மூலம் அந்நிய செலாவணி நாட்டை வந்தடையும் என அமைச்சர் குறிப்பிட்;டார்.