இலங்கையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் அவரை இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ள தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்தியாவில் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியின் மத்திய வரிசையைப் பலப்படுத்த ஏஞ்சலோ மெத்யூஸ் போன்ற அனுபவசாலியின் பிரசன்னம் அவசியம் என உணரப்பட்டதை அடுத்தே அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந் நிலையில் நியூஸிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரம் தெரிவித்தது.
நியூஸிலாந்துக்கு எதிராக மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் (தகுதிகாண்) தொடரில் இலங்கை அணிக்காக மத்திய வரிசையில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்டுகிறது.
அந்த தொடரில் முழுமையான வெற்றிபெற்றால் இலங்கைக்கு நேரடியா உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அல்லது தகுதிகாண் சுற்றில் விளையாடவேண்டிவரும்.
ஸிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் 2008இல் நடைபெற்ற போட்டி மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான மெத்யூஸ், 2021இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடைசியாக விளையாடி இருந்தார்.
இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் அவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
218 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 சதங்கள், 40 அரைச் சதங்கள் உட்பட 5835 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ள மெத்யூஸ் சிறப்பு துடுப்பாட்ட வீரராகவே அணியில் இடம்பெறவுள்ளார்.
பந்துவீச்சில் 120 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள மெத்யூஸ் மீண்டும் பந்துவீச்சில் ஈடுபடுவார் என எதிர்பார்க்க முடியாது.
இலங்கைக்கு விஜயம் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய மெத்யூஸ், 2ஆவது போட்டியில் அரைச் சதம் பெற்று தெரிவாளர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தார்.