முதல் முறையாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் மே தினத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதில் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து தெரிவிக்கையில், “அநீதியான இடமாற்றம், முறையான பதவி உயர்வு இன்மை, சம்பள முரண்பாடு. நிலுவை சம்பளம் வழங்கப்படாமை , எமது சம்பளத்தை எமக்கு தெரியாமல் திருடுதல், ஆசிரியர்களுக்கு மேலதிக வேலைகளை தலையில் சுமத்துதல், மலையக ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் தரத்திற்கு இணைக்காமை, இலவச கல்வியை இல்லாமல் செய்வதற்கான செயல்கள், மாணவர்களுக்கு சிறந்த கல்விக் கூடங்கள் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு வட மாகாணத்தை சேர்ந்த அனைத்து ஆசிரியர்களையும் மே தின நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றொம்.
மே 7ஆம் திகதி கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் நடைபெறும் மே தின கூட்டத்திற்கும் நாட்டின் அனைத்து ஆசிரியர்களையும் தோழமையுடன் அழைக்கின்றோம். எனத் தெரிவித்துள்ளார்.