பிராந்திய ஒத்துழைப்பிற்கான சக்திமிக்க தளமாக சார்க் மாநாட்டை புதுப்பிக்க, இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பாகிஸ்தான் ஆர்வம் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் காரியாலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எல்.கே.ஜயனாத் சீ பெரேரா, பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸியை மரியாதை நிமித்தம் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சந்தித்துள்ளார். இதன்போது இவ்விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக குறித்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது பாகிஸ்தான் உரம் வழங்கி உதவியமை மற்றும் பாகிஸ்தான் செல்லும் இலங்கை யாத்திரீகர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்தமை உள்ளிட்ட பல விடயங்களுக்க இதன்போது இலங்கை சார்பில் உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து, இலங்கையின் தலைமைத்துவத்தை பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.
அத்தோடு, பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தளமாக சார்க் மாநாட்டை நடத்துவதற்கு இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் கடந்த வருடம் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்த சார்க் மாநாட்டை, அந்நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை உள்ளிட்ட அதன் உறுப்பு நாடுகள் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.