ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அமைக்கப்படும் பாதையாக இருக்கும் என்றும் வெளிநாட்டு தூதுவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டால் இலங்கையில் மனித உரிமைகள் திரும்பவும் இருண்ட நாட்களுக்குச் செல்லும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தலை அடுத்து தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு தூதுவர்கள் கவலையடைந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், மஹிந்தவின் வருகை தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கூட்டு எதிரணியினருடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார்.
அத்துடன், தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இலங்கைக்கான அமெரிக்க, பிரித்தானிய, இந்திய, சீன தூதுவர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தியுள்ளனர்.
இந்த நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக வாய்ப்புக்கள் குறித்து வெளிநாட்டு தூதுவர்கள் அச்சமடைந்துள்ளனர்.