இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் தங்கியிருந்து செயல்பட்டு வரும் இந்திய வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு குறித்து தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், “இலங்கையில் உள்ள இந்திய வர்த்தக சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி. ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் போது நிவாரண உதவிகளை வழங்குவதில் அவர்கள் செய்த பங்களிப்பு பாராட்டுக்குரியது” என தெரிவித்துள்ளார்.

‘டித்வா’ சூறாவளி தாக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதில் இந்திய வணிக சமூகத்தினர் முன்னணியில் செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவர்களின் இந்த மனிதாபிமான முயற்சிகளை இந்திய அரசு உயர்வாக மதிப்பதாகவும் அமைச்சர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இந்திய முதலீடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதோடு, அவசரகாலங்களில் மக்களுக்கான உதவிகளிலும் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இன்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், வணிக மற்றும் சமூக பிரதிநிதிகளை சந்தித்ததுடன் இந்தியா–இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்ட நிலையில், மீண்டும் இந்தியாவுக்கு புறப்பட்டார்.

