இலங்கையில் மேலும் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மக்கள் பட்டினி கிடப்பதா உயிர்காக்கும் மருந்துகளை கொள்வனவு செய்வதா பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு தேவையான பணத்தை பெறுவதா என்ற மனதை வருத்தும் தெரிவுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை குழு செம்பிறை குழு ஆகியவை இலங்கையை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட தேவை மதிப்பீட்டின் போது நாட்டின் 25 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் உள்ள 2900 குடும்பங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏதோ ஒருவகையில் 96 வீதம் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
உணவுப்பாதுகாப்பின்மை சுகாதாரம் வாழ்வாதாரம் மற்றும் போசாக்கு ஆகியனவே இவர்களின் முக்கிய கரிசனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.
உடல்ரீதியான பாதுகாப்பு மோசமடைவது பாதுகாப்பு பெண்கள் சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளும் கரிசனைக்குரிய விடயங்களாக காணப்படுகி;ன்றன.
உணவை பெற்றுக்கொள்வதில் கவலையளிக்கும் விதத்தில் பெரும் நெருக்கடி காணப்படுவது சர்வதேச செஞ்சிலுவை குழுவின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
அதிக விலை வருமான அழுத்தங்கள் அல்லது போதியளவு உணவின்மை போன்றன இவற்றிற்கான காரணங்கள்.
அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் வாழ்வாதார இழப்பு ஆகியன அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்களை சமாளிப்பதற்கான மக்களின் திறனில் இரண்டு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
வருமான இழப்பு குறிப்பிடத்தக்க அளவு உணவுப்பாதுகாப்பின்மையை உருவாக்குகின்றது அதேவேளை பணவீக்கம் மருந்துகளின் விலைகளை அதிகரிக்கின்றது எரிபொருள் விலை அதிகரிப்புகள் அத்தியாவசிய சுகாதாரசேவையை பெற்றுக்கொள்வதை தடுக்கின்றது.
உடனடி மனிதாபிமான தலையீடுகள் இல்லாதபட்சத்தில் மக்கள் மீதான தாக்கம் நீண்ட காலத்திற்கு காணப்படும் என செஞ்சிலுவை குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
நாங்கள் மக்கள் மத்தியில் சமூகங்களின் இதயத்தில் பணியாற்றுகின்றோம்,நம்பிக்கை இழப்பு எதிர்காலம் குறித்த கடும் அச்சம் பற்றிய மனதை உருக்கும் கதைகளை நாங்கள் செவிமடுக்கின்றோம்,என தெரிவித்துள்ள இலங்கை செஞ்சிலுவை குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஸ் குணசேகர வாழ்க்கை என்பது அவர்களிற்கு உயிர்வாழ்தலிற்கான போராட்டத்தில் தோற்பதை போன்று காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.