அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான திங்கட்கிழமையன்று (17) சதீர சமரவிக்ரம தனது மீள்வருகையை கன்னிச் சதத்துடன் கொண்டாட, இலங்கை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 591 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் அயர்லாந்து 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் இருக்கிறது. பலோ ஒன்னை தவிர்ப்பதற்கு அயர்லாந்து மேலும் 275 ஓட்டங்களைப் பெறவேண்டும். அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது.
ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். கடந்த 7 வருடங்களில் இலங்கை விக்கெட் காப்பாளர் ஒருவர் சதம் குவித்தது இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்னர் குசல் பெரேரா 2016இல் ஸிம்பாப்வேக்கு எதிராக சதம் குவித்திருந்தார்.
அயர்லாந்துடனான போட்டியில் தினேஷ் சந்திமாலும் சதம் குவித்ததுடன் அவருடன் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 183 ஓட்டங்களை சதீர சமரவிக்ரம பகிர்ந்தார். தினேஷ் சந்திமால் ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது 14ஆவது டெஸ்ட் சதமாகும்.
அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (179), குசல் மெண்டிஸ் (140) ஆகிய இருவரும் முதல் நாளன்று சதங்கள் குவித்து இலங்கையைப் பலப்படுத்தியிருந்தனர்.
போட்டியின் 2ஆம் நாளான இன்று திங்கட்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 386 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை முதல் 30 நிமிடங்களுக்குள் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய (16), தனஞ்சய டி சில்வா (12) ஆகிய இருவரையும் இழந்தது.
ஆனால், சந்திமாலும் சமரவிக்ரமவும் மிகவும் திறமையாகவும் சற்று வேகமாகவும் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்து அணியை மேலும் பலப்படுத்தினர். 155 பந்துகளை எதிர்கொண்ட சந்திமால் 12 பவுண்டறிகள் அடங்கலாக 102 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
சமரவிக்ரம 114 பந்துகளில் 11 பவுண்டறிகள் உட்பட ஆட்டம் இழக்காமல் 104 ஓட்டங்களைப் பெற்றார்.
அயர்லாந்து பந்துவீச்சில் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 84 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கடும் வெய்யிலுக்கு மத்தியில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அயர்லாந்து 2ஆவது ஓவரில் மறே கமின்ஸ் (0), அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி (4) ஆகிய இருவரின் விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (4 – 2 விக்.). அவர்கள் இருவரையும் விஷ்வா பெர்னாண்டோ ஆட்டம் இழக்கச் செய்தார்.
எனினும் ஆரம்ப வீரர் ஜேம்ஸ் மெக்கலம் (35), ஹெரி டெக்டர் (34) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஆறுதலைக் கொடுத்தனர்.
ஆனால், 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெக்டர், கேர்ட்டிஸ் கெம்ஃபர் (0), மெக்கலம் ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க அயர்லாந்து மீண்டும் ஆட்டம் கண்டது. (85 – 5 விக்.)
தொடர்ந்து பீட்டர் முவர் 14 ஓட்டங்களுடனும் ஜோர்ஜ் டொக்ரெல் 2 ஓட்டங்களுடனும் களம் விட்டு வெளியேறினர்.
லோர்க்கன் டக்கர் 21 ஓட்டங்களுடனும் அண்டி மெக்ப்றைன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தனது 6ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ப்ரபாத் ஜயசூரிய 5ஆவது தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் இதுவரை 38 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளார்.
போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நாளைய தினம் (18) தொடரும் போது அயர்லாந்தின் எஞ்சிய 2 விக்கெட்களும் குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்ந்தால் அவ்வணி பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்படும். எனின் இந்தப் போட்டி 3 நாட்களுக்குள் நிறைவடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.