ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புகூறல் தொடர்பிலான தீர்மானத்திலிருந்து கோட்டாபாய -மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் விலகியிருப்பதால் சர்வதேசத்திலிருந்து பல்வேறு வகையிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜெனீவா விவகாரத்தில் அரசாங்கம் மீள் ஆய்வை செய்ய வேண்டும் என்று கூறுகின்றேன். எதிர்காலத்தில் எந்தவகையான அழுத்தங்கள் எமது நாடு மீது பிரயோகிக்கப்படும் என்ற பிரச்சினையும் உள்ளது. எவ்வாறாயினும் எமது நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட்டோம்.
எனினும் சர்வதேச நாடுகளுடன் மீண்டும் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி செயற்படவே எதிர்பார்த்தோம். எதிர்காலத்தில் எவ்வகையான அழுத்தம் வருமோ தெரியாது. ஆகவே தற்போதைய அரசாங்கம் மீளாய்வு செய்து சரியான முடிவை எடுக்கும் என நினைக்கின்றேன்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் அவசியமான மாற்றங்கள் எதிர்காலத்தில் நடக்கும் என நம்புகின்றேன். தற்போது பொதுத் தேர்தலொன்று நெருங்கிவருகின்ற காரணத்தினால் அந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்ற சந்தேகம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

