Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இறைவனை அடைய ஒன்பது வழிகள்

August 15, 2021
in News, ஆன்மீகம்
0
இறைவனை அடைய ஒன்பது வழிகள்

இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகைகள் இருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் சொல்கிறார்கள். அந்த ஒன்பது வகையான வழிபாடுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

இறை வழிபாடு என்றாலே, ஒன்று ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது, அல்லது வீட்டின் பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களை வணங்குவது என்பதாகத்தான் பலரும் கருதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகைகள் இருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் சொல்கிறார்கள். அந்த ஒன்பது வகையான வழிபாடுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

கேட்பது : இறைவனுடைய பெருமைகளையும், புகழையும் காதாரக் கேட்பது, இதனை ‘கேட்டல் வழிபாடு’ என்கிறார்கள். கோவில்களில் மற்றும் பிற இடங்களில் நடைபெறும் ஆன்மிக சொற்பொழிவுகளை இதற்கு சான்றாகக் கூறலாம். இறைவனைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டு, தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். கேட்பது என்பது சாதாரண காரியம் என்று நினைக்கக்கூடாது. அதற்கு மனம் ஒத்துழைக்க வேண்டும். அதனால்தான் இறை வழிபாட்டில், ‘கேட்டல்’ முறைக்கு முதலிடம்.

பாடுவது : இறை வழிபாட்டில் இரண்டாவது சிறப்பைப் பெறுவது, ‘பாடுதல்.’ இறைவனை தங்களின் பாட்டால், தன் வசப்படுத்தி அவன் அருளைப் பெற்றவர்கள் ஏராளமானவர்கள். அவர்களில் தேவாரம், திருவாசகம் பாடிய அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் முதன்மையான இடத்தைப் பெறுகிறார்கள். இவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு, அதற்கு தகுந்தாற்போல் இறைவன் நடந்துள்ளார் என்பதை நாம் படித்திருக்கிறோம். பக்தியோடு இணைந்த பாடலுக்கு எப்போதும் சக்தி உண்டு. அப்படிப்பட்ட பாடலின் வாயிலாகவும் நாம் இறைவனின் அருளைப் பெற முடியும்.

நினைப்பது : இறைவனின் சிந்தனையிலேயே மூழ்கியிருப்பது என்று இதனைச் சொல்வார்கள். இதுவும் சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு தியான நிலைக்கு ஒப்பானது. மனிதனின் மனம் என்பது எண்ண ஓட்டங்கள் நிறைந்தது. நொடிக்கு ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும், கட்டுக்குள் அடங்காத குதிரை போன்றது மனம். அதனை ஒருநிலைப்படுத்தி, இறைவனைப் பற்றி மட்டுமே சிந்திப்பது, அவன் நினைவிலேயே மூழ்கியிருப்பது என்பது அசாதாரணமான விஷயம். அந்த வகையில் ‘நினைத்தல்’ என்பதும் இறை வழிபாட்டில் உயர்வான ஒரு நிலை என்பதை மறுப்பதற்கில்லை.

அடிதொழுதல் :இறைவனின் அடியைத் தொழுவதுதான், நாம் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் ஒரே வழி. நம்முடைய வாழ்க்கையானது இன்பமும், துன்பமும் நிறைந்த கடல் போன்றது. அதில் நம்மை மூழ்கிவிடாமல் கைதூக்கி விடுவது, இறைவனின் திருவடிதான். அதனைப் பற்றிக்கொண்டவர்களே, அதிகமாக வாழ்க்கையின் பெருந்துயரில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். எந்த நிலையிலும், எப்படிப்பட்ட துயரம் வாட்டியபோதிலும் இறைவனையே தொழுது பேறு பெற்ற நாயன்மார்கள் இதற்கு சான்றாக இருக்கிறார்கள்.

பூஜித்தல் : இறை வழிபாட்டில் ஐந்தாவதாக இருப்பதுதான், இந்த காலகட்டத்தில் பலரும் பின்பற்றும் நடைமுறையில் ஒன்றான ‘பூஜித்தல்.’ இறைவனை வழிபாடு செய்ய ஆகம விதிகளும், வழிபாட்டு முறைகளும் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும், எப்படி பூஜித்தாலும், அந்த வழிபாட்டில் பக்தியும், அன்பும் இருந்தால் இறைவனின் அருளை நிச்சயமாக பெற முடியும் என்பதே, பலரது அனுபவ வார்த்தை. இதற்கு உதாரணமாக நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் கண்ணப்ப நாயனாரைக் கூறலாம். அவர் இறைவனுக்கு, அன்பு மிகுதியால் இறைச்சியை அமுதாக படைத்தவர்.

அன்பு : இறைவன் மீது கொண்டிருக்கும் அன்பும், காதலும் கூட ஒருவகையான வழிபாடுதான். ராதை, மீராபாய் போன்றவர்கள், தங்களுடைய அன்பினால் இறைவனையே கட்டிப்போட்டவர்கள். பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன், பல்லாயிரம் உருவமாக பெருகி நின்ற கிருஷ்ணனை, தன்னுடைய அன்பு காரணமாக உள்ளத்திலேயே கட்டிப்போட்ட கதையை, நாம் மகாபாரதத்தில் பார்க்கிறோம்.

ஒப்படைத்தல் :இறைவழிபாட்டிலேயே கடைசியாக இருப்பது, இந்த ‘ஒப்படைத்தல்.’ தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பது. இதனை ஒருவித சரணாகதி என்றும் சொல்லலாம். இது ஒரு உயர்வான வழிபாட்டு முறை. இதனை மகான்கள் மட்டுமே செய்திருக்கிறார்கள். ஆன்மிகத்தின் உச்சமாக இந்த வழிபாட்டு முறை இருக்கிறது.

வணங்குதல் : திருவடி தொழுதல், பூஜித்தல், வணங்குதல் ஆகிய மூன்றும் ஒன்றுபோல தோன்றினாலும், அவற்றிற்குள் சிறிய அளவிலான வித்தியாசம் இருக்கிறது. இங்கே வணங்குதல் என்பதை ‘தலைவணங்குவது’ என்று பொருள் கொள்ளலாம். திருவடி தொழுதல் மற்றும் பூஜித்தலில் பக்தி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் வணங்குவதில், நாம் நம்முடைய ஆணவத்தை இறைவனின் காலடியில் சமர்ப்பிக்கிறோம். ‘நான்’ என்ற அகங்காரத்தை விடுத்து, ‘எல்லாம் நீ’ என்று இறைவனுக்கு தலை வணங்கும் முறை இது.

தொண்டு : தன்னலம் கருதாது செய்யும் தொண்டு, எப்போதும் இறைவனை நெருங்குவதற்கான நேரடி வழி என்றுதான் சொல்ல வேண்டும். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்’ என்ற வாசகம் இந்த வழிபாட்டிற்கு பொருத்தமாக இருக்கும். பாடல்களின் வாயிலாக இறைவனை வழிபட்டவர் திருநாவுக்கரசர் என்றாலும், அவர் தன்னுடைய தள்ளாத வயதிலும் பல தொண்டுகளைச் செய்தவர். அதனால்தான், கயிலைக் காட்சியைக் காண தன் உடல் நோக கயிலை நோக்கிப் புறப்பட்ட திருநாவுக்கரசருக்கு, திருவையாறிலேயே அந்தக் காட்சியை அருளியவர் சிவபெருமான். நீங்கள் செய்யும் தொண்டு, இறைவனையே உங்களைத் தேடி வரவைக்கும்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

நீரிழிவு நோயாளிகளுக்கான மழைக்கால பழங்கள்

Next Post

‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post
‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures