கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்று நடைபெற்ற 4 நாடுகளுக்கு இடையிலான பிரதமர் கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் வசீம் ராஸீக் போட்ட 4 கோல்களின் உதவியுடன் மாலைதீவுகளுடனான போட்டியை 4 – 4 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
போட்டியின் 63 ஆவது நிமிடம்வரை 0 – 4 என்ற கோல்கள் கணக்கில் பின்னிலையில் இருந்ததால் இலங்கை படுதோல்வியை தழுவுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், இப் போட்டியில் சுப்பர் ஹீரோவாக பிரகாசித்த வசீம் ராஸிக் 26 நிமிட இடைவெளியில் 4 கோல்களைப் போட்டு இலங்கை அணிக்கு கௌரவத்தை தேடிக்கொடுத்தார். அவர் போட்ட 4 கோல்களும் கிட்டத்தட்ட ஒரே விதமாக அமைந்திருந்தது.
இப் போட்டியில் இலங்கை அணியின் பின்கள மற்றும் மத்தியகள வீரர்கள் விட்ட தவறுகளால் இடைவேளைக்கு முன்னர் மாலைதீவுகள் 3 கோல்களைப் போட்டு முன்னிலையில் இருந்தது.
போட்டியின் 8 ஆவது நிமிடத்தில் வலதுகோடியிலிருந்து அலி அஷ்பக் பரிமாறிய பந்தை மிக அலாதியாக தலையால் முட்டி மாலைதீவுகளின் முதலாவது கோலை அணித் தலைவர் அக்ராம் அப்துல் கானி புகுத்தினார்.
அடுத்த நிமிடத்திலேயே மாலைதீவுகள் 2 ஆவது கோலையும் போட்டது. மீண்டும் அலி அஷ்பக் பரிமாறிய பந்தை அலி பஸிர் கோலாக்கினார்.
போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து பெற்ற பந்தை, இலங்கையின் பின்கள வீரர்கள் இருவரைக் கடந்தவாறு நகர்த்தி சென்ற இப்ராஹிம் ஹசெய்ன் 3ஆவது கோலைப் போட்டார்.
இடைவேளையின் பின்னர் திறமையை வெளிப்படுத்த இலங்கை முயற்சித்தது. எனினும் மாலைதீவுகளின் அலி அஷ்பக் தனிஒருவராக பந்தை நகர்த்திச் சென்று 4ஆவது கோலைப் போட்டு இலங்கை அணியைப் பிரமிப்பில் ஆழ்த்தினார்.
அதன் பின்னர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் விளையாடிய இலங்கை அணி 64 ஆவது நிமிடத்தில் மார்வன் ஹெமில்டன், டிலொன் டி சில்வா ஆகியோரின் பந்து பரிமாற்றங்களின் உதவியுடன் வசீம் ராஸீக் மூலம் முதலாவது கோலைப் போட்டது இலங்கை.
நான்கு நிமிடங்கள் கழித்து மீண்டும் டிலொன் டி சில்வா பரிமாறிய பந்தை ராஸீக் கோலாக்க இலங்கை அணி உற்சாகத்தில் மிதந்தது.
அதன் பின்னர் அபாரமாக விளையாடிய இலங்கை அணி 72 ஆவது நிமிடத்தில் வசீம் ராஸீக் மூலம் 3ஆவது கோலைப் போட்டது.
உபாதையீடு நேரத்தின்போது மேலும் ஒரு கோலைப் போட்ட ராஸீக் தனது கோல் எண்ணிகையையும் இலங்கையின் கோல் எண்ணிக்கையையும் 4ஆக உயர்த்தி போட்டியை 4 – 4 என வெற்றிதோல்வியின்றி முடிவடையச் செய்தார்.
இதன் மூலம் தனது அணிக்கும் இலங்கைக்கும் வசீம் ராஸீக் கௌரவத்தை ஈட்டிக்கொடுத்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]