எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினர் திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்றுச் சந்தித்தனர்.
சிநேகபூர்வமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சட்டத்தரணி பாயிஸ், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, எதிர்க்கட்சித் தலைவரின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் குகதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சந்திப்பின் பின்னர் அமைச்சர் ஹக்கீம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
“குச்சவெளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்காதபோதும் அந்தப் பிரதேச சபையின் ஆட்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனதாக்கிக் கொண்டது. எஞ்சியுள்ள சபைகளில் எங்கெல்லாம் இணைந்து ஆட்சியமைக்க முடியுமோ அந்தப் பிரதேசங்களில் பரஸ்பர விட்டுக் கொடுப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளோம். இந்தத் தேர்தல் முறையில் உள்ள குறைபாட்டால் பிரதேச சபைகளின் ஆட்சியை அமைப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் எமக்குள் உடன்பாட்டுக்கு வரமுடியாத முரண்பாடுகள் தோன்றியிருந்தன. இருந்தபோதும் தலைமைத்துவ மட்டத்தில் இப்போது நாங்கள் புரிந்துணர்வுடனான உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.
மீதமுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒருமித்த நிலைப்பாட்டோடு செயற்படுவது தொடர்பில் இணங்கியுள்ளோம். சபை நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவதோடு, பதவிகளையும் நியாயமாகப் பகிர்ந்துகொள்ளும் அடிப்படையிலும் பொதுவான உடன்பாட்டினை நாங்கள் கொண்டுள்ளோம். இயன்றவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு விட்டுக்கொடுப்புடனும், உச்சக்கட்ட புரிந்துணர்வுடனும் இணைந்து பணியாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதையிட்டு எங்கள் திருப்தியை நாங்கள் தெரிவித்தோம். மூதூர், தம்பலகாமம், கிண்ணியா உட்பட பல சபைகளில் நாங்கள் இணைந்து செயற்படுவது தொடர்பில் நிலையான உடன்பாட்டுக்கு நாம் வந்துள்ளோம்.”- என்று ஹக்கீம் தெரிவித்தார்.

