இராணுவத்தினரும் மனிதாபிமானம் கொண்டவர்களே. இராணுவ அதிகாரிகளை இடமாற்றம் செய்யக் கோரிப் போராட்டம் நடத்திய காலம் மாறி, இப்போது இடமாற்றம் பெற்றுச் செல்லும்போது கண்ணீர் விட்டழும் நிகழ்வுகள் நடக்கின்றன. இது பன்னாட்டு ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
வவுனியா, புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் நேற்று கற்றல் வள நிலையக் கட்டடம் திறக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது,விஸ்வமடுவில் கடமையாற்றிய கேணல் ரத்ன பிரியபந்து இடமாற்றம் பெற்றுச் சென்றபோது நடந்த நிகழ்வு ஒரு பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் வடக்கு மக்கள் மத்தியில் அவர் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
30 ஆண்டு காலப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், போராளிகளுக்கும் அவர் தன்னாலான பல சேவைகளைச் செய்துள்ளார். சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக வேலை வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுத்துள்ளார்.
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளார். மாணவர்களின் கல்விக்கு உதவி செய்துள்ளார் எனப் பலதரப்பட்டவற்றை அவர் செய்துள்ளார்.
படை அதிகாரிகள் போர் செய்பவர்கள் மட்டுமல்ல, அதற்கு அப்பால் சென்று மனிதாபிமான ரீதியில் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டியுள்ளார். இதை அனைவரு் பின்பற்றினால் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இவருடைய செயற்பாட்டின் மூலமாக நல்லதொரு முன்னுதாரணம் கிடைத்துள்ளது. இவருடைய இந்த சேவை நல்லாட்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே நான் கருதுகிறேன். தற்போது பல அரச அதிகாரிகள் சுற்று நிருபத்துக்கு வெளியில் சென்று வேலை செய்ய விருப்புவதில்லை.
அரசின் ஊடாக அபிவிருத்தி நடக்கின்றபோது அதைச் செயற்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதிகளில் இருந்கும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது முழுப் பங்களிப்பையும் வழங்க வேண்டும்.
அதைவிடுத்துக் குறை கூறிக் கொண்டிருப்பதால் எதையும் சாதிக்க முடியாது. வடக்கு மக்களுக்கு தற்புாது அபிவிருத்தி என்பது இன்றியமையாதது.- என்றார்.