வடக்கு -– கிழக்கில் நல்லிணக்கம் என்று சொல்லிக் கொண்டு விடுதலைப் புலிகளை நினைவுகூரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் போக்கைக் கருத்தில் எடுக்காது இருந்தால், போரை வெற்றிகொண்ட எமது இராணுவத்தை பன்னாட்டுச் சமூகத்தின் தேவைக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால், இந்த நாடு 30 ஆண்டு காலம் பின்னோக்கிப் பயணிப்பதுடன், மீண்டும் தமிழ் மக்களுடன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.
இவ்வாறு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடுவலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் விடுவிக்கப்படுகின்றனர். நல்லிணக்கத்துக்காக இதனைச் செய்வதாக அரசு சொல்கின்றது. நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைவாதத்துக்கு இடம் கொடுத்து பயங்கரவாதிகளை நினைவுகூரவும் அவர்களுக்கான நினைவுத் தூபிகளை எழுப்பவும் இடம் கொடுக்கப்படுகின்றது என்றால் நாட்டின் உண்மையான நல்லிணக்கம் அதுவாக அமையாது.மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து, விடுதலைப்பு லிகளை நியாயப்படுத்தி எமது இராணுவத்தை குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டிற்கு கொண்டுவந்து பன்னாட்டுச் சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றது.
அவ்வாறன ஒரு சூழல் ஏற்பட்டால் மீண்டும் எமது இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து நாட்டினை மீட்டெடுக்க முன்வர மாட்டார்கள்.
வடக்கில் இன்று இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை கருத்தில் கொள்ளாது அவர்களின் நோக்கங்களுக்கு இடம்கொடுத்து வந்தால் மீண்டும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். நல்லிணக்கம் என்ற பெயரில் நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிடும்.
இங்கு எம்மை இராணுவ வெற்றி தினத்தை கொண்டாட வேண்டாம் என்று கூறும் நபர்கள் வடக்கில் புலிகளை நினைவுகூறுவதை அனுமதித்துள்ளனர்.
இராணுவ வெற்றி தினம் நல்லிணக்கத்துக்குத் தடை என்றால் புலிகளை நினைவு கூறுவது நல்லிணக்கத்தை பாதிக்காதா? எந்த கொள்கையின் அடிப்படையில் அரசு இவ்வாறான தீர்மானங்களை முன்னெடுக்கின்றது.
வடக்கில் ஒரு வார காலம் துக்க தினம் கடைப்பிடிக்க முடியும். பாடசாலைகளில், பல்கலைக் கழகங்களில் கொடிகளை பறக்கவிட்டு புலிகளை நினைவுகூறும் செயற்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது இராணுவத்தினர் இன்று சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்கக்கூட தயாராக இல்லை.
இராணுவம் பொதுமக்களை கொன்றது என்ற கூற்று மிக பாரதூரமானது. அவ்வாறான எந்தச் செயற்பாடுகளும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவில்லை. பொதுமக்களை இலக்கு வைத்து இராணுவத் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். நாம் தூய்மையான போரை முன்னெடுத்தோம். எமது கைகளில் இரத்த கறைகள் இல்லை.
ஆனால் பழிவாங்குவது மட்டுமே இந்த அரசின் நோக்கமாக உள்ளது. இன்று புலம்பெயர் புலி அமைப்புகளின் நோக்கங்களை நிறைவேற்றவும், மேற்கு நாடுகளின் கட்டளைகளை நிறைவேற்றவும் இராணுவ தண்டிப்பு கொள்கையினை அரசு கடைப்பிடித்து வருகின்றது. மக்கள் தெளிவாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டின் இராணுவத்தை பாதுகாக்க முன்வரவேண்டும். ஐக்கியமான இலங்கையை உருவாக்க வேண்டும் – என்றார்.

