நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அநீதி’ எனும் திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் அவருடைய நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார்.
வசந்த பாலன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த ‘அநீதி’ படத்தில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ படப் புகழ் நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அர்ஜுன் சிதம்பரம், டி.சிவா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை அர்பன் பொய்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் வசந்த பாலன் மற்றும் அவரது நண்பர்களான எம். கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ரக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் இந்த படத்தை அண்மையில் பிரத்தியேகமாக பார்வையிட்ட இயக்குநர் ஷங்கர், இந்த படத்தை தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் ‘அநீதி’ படத்துக்கு உரிய நீதி கிடைத்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.