நடிகர் லிங்கா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தாவூத்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர் சுசீந்திரன் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.
அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் உருவாகி உள்ள தாவூத் எனும் திரைப்படத்தில் லிங்கா சாரா ஆச்சர் திலீபன் ராதா ரவி சாய் தீனா சா ரா வையாபுரி சரத் ரவி அஜய் அபிஷேக் ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரத் வலயாபதி மற்றும் பிராண்டட் சுஷாந்த் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராகேஷ் அம்பிகாபதி இசை அமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை டெர்ம் புரொடக்ஷன்ஸ் ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். உமா மகேஸ்வரி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 12ம் திகதி அன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கு பற்றி படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” சிறிய முதலீட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘தாவூத்’தை உருவாக்கியிருக்கிறேன். ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
‘இந்த திரைப்படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால்… நிச்சயம் வெற்றி பெறும்’ என இயக்குநர் சுசீந்திரன் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

