ஒரு சில பிரதேசங்களை மாத்திரம் குறிவைத்து இடம்பெரும் இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் சில அதிகார சக்திகள் செயற்படுகின்றன.
அவை தொடர்பிலான விபரங்களும் இந்த தாக்குதல்களுக்கான காரணங்களும் விரைவில் வெளியாகும் என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு தனது கண்டனத்தை தெரிவிக்கும் அதேவேளை தற்போதைய நிலைமையில் பாதுகாப்பு துறையினர் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வழியுருத்தினார்.
வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை அடுத்து மினுவாங்கொட பிரதேசத்துக்கு மக்களை சந்திக்க சென்றிருந்த சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
ஊயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் அமைதியை சீர்க்குழைக்கும் வகையில் இடம்பெறும் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்க கூடியவையாகும்.
விசாரணைளின் மூலமாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைவாக இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஒருசில அதிகார சக்திகள் செயற்படுவது வெளியாகியுள்ளது. அதற்கான தகுந்த சாட்சிகளும் கிடைத்துள்ளன.
தற்போது அது தொடர்பான தகவல்களை குறிப்பிட முடியாவிட்டாலும் இன்னும் ஒருசில தினங்களில் அவை தொடர்பான தகவல்கள் வெளியாகும்.
தற்போதைய நிலைமையில் பாதுகாப்பு துறையினர் மீது அனைவரும் முழு நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியமாகும். இந்த சம்பவங்கள் தொடர்பான முழுமையான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.