மட்டக்களப்பில் இன, மத முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் இந்த விடயம் தொடர்பில் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய சகவாழ்வுக்கான செயற்திட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள அனைவரும் சிரத்தை எடுக்க வேண்டும்.
அந்தவகையில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.
அதன்படி பிரதேசத்திலுள்ள கிராம சேவையாளர்களுக்கு மாவட்ட சர்வமத பேரவையின் செயற்பாடுகளைத் தெளிவுபடுத்துவது தொடர்பிலும், இன, மத முரண்பாடுகளை வளர விடாமல் தடுக்கக்கூடிய முன்னாயத்தங்களைச் செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
இத்தகைய விழிப்புணர்வுக்கென மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள கிராம சேவையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய சமாதான கலந்துரையாடல் செயற்பாடுகளில் அனைத்து இன, மதங்களையும் சேர்ந்த அதிகாரிகள், மத அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத்தொண்டர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் பங்கெடுக்கவேண்டும்“ என வலியுறுத்தியுள்ளார்.

