முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த மனு மீதான வழக்கு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று வரை ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இந்த விசாரணைகளின் போது கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பான எந்த ஆவணங்களும் குடிவரவு திணைக்களத்திடம் இல்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சனத் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மேலதிக சமர்ப்பணங்களை இன்று இலங்கை நேரப்படி, 1.30 மணிக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் உத்தரவிட்ட நிலையில் இன்றும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டது தொடர்பான முறையான ஆவணங்களை வழங்காமல், இலங்கை தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டை கோட்டா பெற்றுக் கொண்டது சட்டவிரோதமானது என்றும் இவை செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு நிலுவையில் உள்ள வரை, கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை கொண்டவராக அங்கீகரிக்க வேண்டாம் என உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

