கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி முதல் நேற்று (08) காலை வரையான காலப்பகுதியில் இருவர் பலியாகியுள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சம்பவங்களின் ஆரம்பம் முதல் இன்று வரையில் 71 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்திலுள்ள தெல்தெனிய, மணிக்ஹின்ன, திகன மற்றும் அக்குரன உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகள் இன்று பொலிஸாரினால் வெளியிடப்பட்டன.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.