இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் விமானங்களுக்கு இன்று முதல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாட்டு விமானங்களுக்கு இலங்கைக்குள் உள்நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 13 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தடை இன்று முதல் அமுலுக்கு வருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தருகின்ற விமானங்களுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த விமான சேவைகளை எதிர்வரும் 2 வார காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய நாடுகளில் இருந்து வருகை தருகின்ற பயணிகளுக்கான ON ARRIVAL விசாவும், இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒன்லைன் விசா நடைமுறையும், இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

